செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையில் இந்தியாவின் சாதனை துளிகள் – ஒரு பார்வை…

உலக கோப்பையில் இந்தியாவின் சாதனை துளிகள் – ஒரு பார்வை…

உலக கோப்பையில் இந்தியாவின் சாதனை துளிகள் – ஒரு பார்வை… post thumbnail image
* இந்த உலக கோப்பையில் இந்தியாவை இதுவரை எதிர்கொண்ட பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து பஞ்சராகியிருக்கின்றன. ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து 5 அணிகளை இந்தியா ஆல்-அவுட் ஆக்கி அசத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும். உலக கோப்பையை எடுத்துக் கொண்டால், தென்ஆப்பிரிக்கா, தொடர்ந்து 6 எதிரணிகளை ஆல்-அவுட் (2011-ம் ஆண்டு) செய்திருக்கிறது.

* இந்திய வீரர் ரோகித் சர்மா 31 ரன்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை எட்டிய 14-வது இந்தியர் ரோகித் சர்மா ஆவார். அவர் இதுவரை 132 ஆட்டங்களில் விளையாடி 4,033 ரன்கள் சேர்த்துள்ளார்.

* உலக கோப்பை போட்டிகளில் ஒட்டுமொத்தத்தில் டோனியின் தலைமையில் இந்திய அணி இதுவரை 14 ஆட்டங்களில் (2011 மற்றும் 2015-ம் ஆண்டு) விளையாடி, அதில் 12-ல் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் அதிக வெற்றிகளை ருசித்த இந்திய கேப்டன்களில் டோனி முதலிட அரியணையில் ஏறியிருக்கிறார். இந்த வரிசையில் கபில்தேவ் (11 வெற்றி), முகமது அசாருதீன் (10 வெற்றி), சவுரவ் கங்குலி (9 வெற்றி) அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

* இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு இது 8-வது சதமாகும். 2013-ம் ஆண்டில் இருந்து இந்த 8 சதங்களையும் அடித்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் அம்லா (10 சதம்), இலங்கையின் சங்கக்கரா (10 சதம்), இந்தியாவின் விராட் கோலி (9 சதம்) ஆகியோருக்கு அடுத்து அதிக சதங்களை சுவைத்தவர் இவர் தான்.

* இந்த ஆட்டத்தில் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் திரட்டினர். உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடக்க விக்கெட்டுக்கு இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கரும், அஜய் ஜடேஜாவும் 1996-ம் ஆண்டு உலக கோப்பையில் கென்யாவுக்கு எதிராக தொடக்க ஜோடியாக 163 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இதுவரையிலான உலக கோப்பை போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கு இந்திய தரப்பில் 100 ரன்களுக்கு மேல் எடுக்கப்படுவது இது 6-வது நிகழ்வாகும்.

* இந்த உலக கோப்பையில் ரன் குவிப்பில் சங்கக்கரா 3 சதங்கள் உள்பட 372 ரன்களுடன் முதலிடத்திலும், ஷிகர் தவான் 2 சதம், ஒரு அரைசதம் உள்பட 333 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி