செய்திகள்,திரையுலகம் மணல் நகரம் (2015) திரை விமர்சனம்…

மணல் நகரம் (2015) திரை விமர்சனம்…

மணல் நகரம் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலையில்லாமல் அக்கா, மாமாவுடன் வாழ்ந்து வருகிறார் கௌதம் கிருஷ்ணா. இவருடைய நண்பரான பிரஜின் துபாயில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தன்னுடைய நண்பருக்கு வேலையில்லாததால் துபாயில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கௌதமை துபாய்க்கு வரவழைக்கிறார் பிரஜின். டூரிஸ்ட் விசாவில் செல்லும் கௌதமை, பிரஜின் தான் தங்கியிருக்கும் அறையிலேயே தங்க வைக்கிறார். துபாயில் ஓட்டல் ஒன்றில் வேலை செய்யும் நாயகி தேஜஸ்வினியை பிரஜின் காதலித்து வருகிறார். ஆனால் அவளை அந்த ஓட்டல் உரிமையாளர் அடைய முயற்சி செய்கிறார்.

ஒருநாள் பிரஜினின் நண்பரான ஜெஸ்சி ஜோஸ் வேலை செய்யும் ஓட்டலில் பார்வையற்றோர் இசைக்குழு நடத்தும் பாடல் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. அப்போது அக்குழுவில் உள்ள ஒருவரின் உடல்நிலை சரியில்லாமல் போக, இவருக்கு பதிலாக கௌதம் அந்த நிகழ்ச்சியில் பாட்டு பாடுகிறார். இதை பார்க்கும் அந்த ஓட்டல் உரிமையாளரின் மகளான வருணாவிற்கு கௌதமை பிடித்து போகிறது. அதன்பிறகு ஒருநாள் கௌதம் ஒரு குழந்தையை விபத்திலிருந்து காப்பாற்றுகிறார். இந்த இரண்டு நிகழ்வுக்கு பிறகு வருணாவிற்கு கௌதம் மீது காதல் ஏற்படுகிறது.தான் காதலிக்கும் கௌதமிற்கு தன்னுடைய ஓட்டலிலேயே வேலை வாங்கி கொடுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். பிரஜினின் காதலியான தேஜஸ்வினி சென்னையில் நிதி நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தனது கம்பெனியை நம்பி சிலரை அதில் முதலீடு செய்ய வைக்கிறார். ஆனால் அந்த கம்பெனியோ பணத்தை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டிவிடுகிறது.

இதனால், தன்னை நம்பி முதலீடு செய்தவர்களின் கடனை அடைக்க துபாய்க்கு வந்து வேலை பார்த்து வருகிறாள். இவள் துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது இவளிடம் பணம் கொடுத்த ஒருவர் அந்த ஓட்டலில் வந்து தங்குகிறார்.அவரும், தேஜஸ்வினி வேலை செய்யும் ஓட்டல் முதலாளியும் நெருங்கிய நண்பர்கள். அப்போது, அந்த ஓட்டலில் தேஜஸ்வினியை பணம் கொடுத்தவர் சந்திக்க, தனது பணத்தை கொடுக்குமாறு அவளிடம் கேட்கிறார். அவள் என்னசெய்வதென்று விழித்து கொண்டிருக்கும்போது, பணம் கொடுத்தவரும், ஓட்டல் முதலாளியும் இணைந்து தங்களது ஆசைக்கு இணங்கினால் பணத்தை கொடுக்கவேண்டாம் என்று அவளிடம் சொல்கின்றனர். இதை தன் காதலனான பிரஜினிடம் தேஜஸ்வினி கூறுகிறார். பிரஜின் தன் நண்பர்களுடன் இணைந்து பணத்தை ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறார். இதற்கிடையில் நண்பர்களும் வெவ்வேறு பிரச்சனையில் சிக்குகிறார்கள். கௌதம்-வருணாவின் காதல் விஷயம் வருணாவின் அப்பாவிற்கு தெரிந்து, இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு வருகிறது. இறுதியில் பிரஜின் பணத்தை ஏற்பாடு செய்து தேஜஸ்வினி பிரச்சனையை தீர்த்தாரா? கௌதம்-வருணாவின் காதல் ஜெயித்ததா? என்பதை சஸ்பென்சுடன் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் நாயகர்களாக பிரஜின் மற்றும் கௌதம் கிருஷ்ணா நடித்திருக்கிறார்கள். பிரஜின் தன்னுடைய அனுபவ நடிப்பால் செண்டிமென்ட் காட்சிகள், காதலிக்காக பணம் ஏற்பாடு செய்யும் காட்சிகளில் ஆகியவற்றில் உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கௌதம் கிருஷ்ணா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.நாயகிகளாக தேஜஸ்வினி மற்றும் வருணா நடித்திருக்கிறார்கள். இருவரும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள். இதில் தேஜஸ்வினி வலுவான கதாபாத்திரத்தை ஏற்று யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வருணா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.நாயகியின் ஓட்டல் முதலாளியாக வருபவரின் நடிப்பு மென்மையான வில்லத்தனம். தமிழ் நாட்டை விட்டு துபாயில் வேலை செய்யும் மனிதர்களின் கஷ்டத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்ஒரு தலை ராகம் சங்கர். அழகான திரைக்கதையை படத்திற்கு அமைத்திருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் இதில் இடம்பெறும் வசனம். ஒரு சில காட்சிகள் பழைய படங்களை ஞாபகப்படுத்துகிறது. இதை மட்டும் தவிர்த்திருக்கலாம். ரெனில் கௌதம் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கலாம். ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் துபாய் நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மணல் நகரம்’ காதல் நகரம்………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி