அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ராகுல் காந்தி முடிவால் தடுமாறும் காங்கிரஸ்!…

ராகுல் காந்தி முடிவால் தடுமாறும் காங்கிரஸ்!…

ராகுல் காந்தி முடிவால் தடுமாறும் காங்கிரஸ்!… post thumbnail image
புது டெல்லி:-பாரம்பரிய காங்கிரசை கட்டிக் காக்கும் ஒரே பரம்பரை வாரிசு. இதுதான் காங்கிரஸ்காரர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.ராகுல் அரசியலுக்கு வந்த வேகமும், எளிமையும் எல்லோரையும் கவர்ந்தது. காங்கிரஸ்காரர்களை உற்சாகம் அடைய செய்தது.சாய்ந்து கிடக்கும் காங்கிரசை தூக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கை துளிர் விட செய்தது. அதற்கு ஏற்றாற்போல் ராகுல் காந்தியின் அதிரடி பிரசாரமும், ரோட்டோர நாடகங்களும் அமைந்தது.இளைஞர் காங்கிரசுக்கு உறுப்பினர் சேர்க்கையில் புதிய முறை, நிர்வாகிகள் தேர்தலில் கடுமையான விதிமுறை என்று பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.ஆரம்பம் அமர்க்களமாக தெரிந்ததால் முடிவு பிரமாதமாக இருக்கும் என்று கணக்கு போட்டனர்.

கட்சி மேலிடமும் அவருக்கு முழு சுதந்திரம் அளித்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற உ.பி. உள்பட சில மாநில தேர்தல்களை ராகுல் காந்தியே பொறுப்பேற்று சந்தித்தார். எல்லா மாநில தேர்தல்களிலுமே காங்கிரசுக்கு மரண அடி கிடைத்தது. ராகுலின் வியூகம் தகர்ந்தது.
ராகுல் பிரசாரம் செய்தால் பா.ஜனதாவுக்கு வெற்றி என்று கிண்டலடிக்கும் அளவுக்கு அவரது பிரசாரம் அமைந்தது.டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் காணாமல் போனது. பல ஆண்டுகளாக காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்த டெல்லியில் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியாமல் போனது ராகுல் தலைமையை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது.காங்கிரசில் ஒரு தரப்பினர் பிரியங்கா காந்தியை நேரடி அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கி விட்டனர்.மூத்த தலைவர்கள் பலர் எதிர்பார்த்த அளவு ராகுலிடம் தலைமைப் பண்பு இல்லை என்று விமர்சனம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
அடுத்த வாரிசு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். சவால்களை சந்திக்க முடியாத கவலையும், தொடர் தோல்வியால் ஏற்பட்ட தவிப்பும் ராகுல் காந்தியை நிம்மதியின்றி நிலைகுலைய செய்துள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் பழம் தின்று கொட்டை போட்ட பழம் பெருச்சாளிகள் – எப்போதுமே சோனியாவை சுற்றியிருந்து துதிபாடியே நினைத்ததை சாதித்து விடுவார்கள்.அவர்கள், ராகுல் தலைவராக வருவதை விரும்பவில்லை. சோனியாவை சுற்றி நடக்கும் அரசியல்களால் ராகுல் காந்தி மிகவும் நொந்து போய் இருக்கிறார். மூத்த தலைவர்களின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த ராகுல் காந்தி அவர்களை நீக்கி விட்டு கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச விரும்புகிறார்.இது தொடர்பாக அவர் எடுத்த சில நடவடிக்கைகளுக்கு மூத்த தலைவர்களே முட்டுக்கட்டை போட்டனர். அதை மீறி ராகுலால் எதுவும் செய்ய முடியவில்லை.கட்சிக்கு உள்ளேயும் பிரச்சினை. வெளியேயும் பிரச்சினை. சந்திக்க முடியாமல் தவித்த ராகுலுக்கு கொஞ்சம் நிம்மதி தேவைப்பட்டது.நிம்மதியை தேடி ஜெர்மனியின் முனீச் நகருக்கு சென்று அங்கிருந்து கிரீசுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாராளுமன்ற விவாதங்களை எதிர்கொள்ள முடியாதவர் என்ற விமர்சனமும் இருந்து வரும் நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநாட்டுக்கு ஓய்வு எடுக்க சென்றிருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ராகுலின் திடீர் ஓய்வை குறை கூறி உள்ளன. அவரது அரசியல் ஈடுபாடு குறித்தும், நாட்டு விவகாரங்களில் அவரது அக்கறை குறித்தும் கேள்வி எழுகிறது என்று பா.ஜனதா விமர்சித்துள்ளது.ராகுல் காந்தி அரசியலில் சமாளிக்க முடியாததால் விலக முடிவு செய்துள்ளார். எனவேதான் நீண்ட ஓய்வுக்காக சென்றுள்ளார் என்று டெல்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது.ஆனால் இதை காங்கிரஸ் மறுத்துள்ளது. முறைப்படி தனது தாயாரான சோனியாவிடம் விண்ணப்பித்து ராகுல் காந்தி விடுமுறை பெற்று சென்றுள்ளார்.கட்சியின் சமீபத்திய தோல்விகளுக்கு எதிர்வினை யாற்றுவது மற்றும் கட்சியின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதற்கு இந்த விடுமுறை காலத்தை ராகுல் பயன்படுத்திக் கொள்வார். ஏப்ரல் மாதம் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். எனவே கட்சி மாநாட்டுக்காக அவர் தயாராக விரும்புகிறார் என்று காங்கிரஸ் கூறுகிறது.சோனியாவும் ராகுலின் இந்த விடுமுறை குறித்து விரிவாக கருத்து சொல்ல மறுத்து விட்டார். எதையெல்லாம் சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் சொல்லி விட்டோம் என்றார்.அரசியலில் இருந்து விலகும் எண்ணம் அவருக்கு இல்லை. மூன்று அல்லது நான்கு வாரங்கள் விடுமுறைதான் எடுத்திருக்கிறார் என்று காங்கிரஸ் கூறுகிறது. பொது பட்ஜெட், ரெயில்வே பட்ஜெட் நிறைவேற்றப்பட உள்ள நிலையில் ராகுல் ஓய்வு என்று ஓடியிருப்பதுதான் பல கோணங்களில் சிந்திக்க வைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி