செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா!…

உலக கோப்பையில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா!…

உலக கோப்பையில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா!… post thumbnail image
மெல்போர்ன்:-உலக கோப்பை போட்டிகளில் மெல்போர்னில் நேற்று நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 137 ரன்களும், ரகானே 79 ரன்களும், கோலி 46 ரன்களும் எடுத்தனர். வெற்றிக்கு 308 ரன்கள் தேவை என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அம்லாவும், காக்கும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாட ஆரம்பித்த நேரத்தில் 3வது ஓவரிலேயே காக்கை அவுட்டாக்கி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சியளித்தார் முகமது ஷமி. அடுத்து டு பிளிஸ்சிஸ் களமிறங்கினார்.

அவரும் பொறுப்புடன் விளையாடி ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் 10 ஓவர் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 11வது ஓவரின் போது அம்லா 22 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து டி வில்லியர்ஸ் களம் புகுந்தார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய டி வில்லியர்ஸ் 15 ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார். 17வது ஓவரில் டு பிளிஸ்சிஸ் தன் பங்குக்கு இரண்டு பவுண்டரிகளை அடித்தார். தொடர்ந்து 22வது ஓவரில் மீண்டும் இரண்டு பவுண்டரிகளை அடித்தார் டு பிளிஸ்சிஸ். ஜடேஜா வீசிய 23வது ஓவரில் 30 ரன்களில் ரன் அவுட்டானார் டி வில்லியர்ஸ். இதையடுத்து மில்லர் டு பிளிஸ்சிசுடன் ஜோடி சேர்ந்தார். 26வது ஓவரின் கடைசி பந்தில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்த டு பிளிஸ்சிஸ் அடுத்த சில நிமிடங்களில் 55 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

பின்னர் களம் புகுந்த டுமினியும் நிலைத்து நிற்கவில்லை. அஸ்வின் வீசிய 31வது ஓவரில் 6 ரன்னுக்கு அவுட்டாகி நடையை கட்டினார் அவர். பின்னர் மீண்டும் அஸ்வின் வீசிய 33வது ஓவரில் நன்றாக விளையாடி கொண்டிருந்த மில்லரும் 22 ரன்னில் ரன் அவுட்டானார். அதே ஓவரின் கடைசி பந்தில் பிலாண்டரும் டக் அவுட்டானார். 9வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டெயின் வந்த வேகத்தில் 1 ரன்னுக்கு அவுட்டானார். 38வது அஸ்வின் மீண்டும் அசத்தினார். அந்த ஓவரின் 2வது பந்தில் மோர்கலை 2 ரன்களில் போல்டாக்கினார் அஸ்வின். கடைசி விக்கெட்டாக இம்ரான் தாஹிரை அவுட்டாக்கினார் ஜடேஜா. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது. இதன் மூலம் முதன் முறையாக உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி