செய்திகள்,திரையுலகம் சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…

சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…

சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
கும்பகோணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தாதாவாக வலம் வருகிறார் சர்வேஸ்வரன் (சரத்குமார்). இவர் தன் எதிரிகளை வித்தியாசமான முறையில் கொலை செய்து வருகிறார். இவர் செய்யும் கொலைகள் எந்த தடயங்களும் இல்லாமல் எப்படி இறந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதளவிற்கு செய்து வருகிறார். இருந்தாலும் இவர் கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுவதால் இவர் மீது போலீஸ் சந்தேகித்து வருகிறது. ஒரு நாள் அரசு சார்பாக மரநடு விழா ஒன்று நடைபெறுகிறது. அப்போது பள்ளத்தை தோண்டும் போது ஒரு பிணம் போலீசுக்கு கிடைக்கிறது. அந்த பிணத்தை சோதனை செய்து பார்க்கும் போது ஒரு வித்தியாசமான கெமிக்கல் மூலம் கொலை செய்யப்பட்டிருப்பதை அறிகிறார்கள். இதை யார் செய்தார்கள்? என்று போலீஸ் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சமுத்திரகனி, கும்பகோணத்தில் சர்வேஸ்வரன் செய்யும் கொலைகளுக்கு ஆதாரங்களை கண்டுபிடித்து கைது செய்யும் நோக்கில் கும்பகோணத்திற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறார். கும்பகோணத்திற்கு வரும் சமுத்திரகனி பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சர்வேஸ்வரனை சந்திக்க செல்கிறார். அங்கு நீங்கள் செய்யும் கொலைகள் எல்லாம் எனக்கு தெரியும். இனிமேல் எந்த தவறும் செய்யக்கூடாது என்று கூறி விட்டு செல்கிறார்.இதைக் கேட்ட சர்வேஸ்வரன், சமுத்திரகனியை விட்டு வைக்கக்கூடாது என்று முடிவு செய்து அவரை கொல்ல திட்டமிடுகிறார். சமுத்திரகனியோ சர்வேஸ்வரனை ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறார். இதிலிருந்து சர்வேஸ்வரன் சாமர்த்தியமாக தப்பிக்கிறார். இந்நிலையில் பொள்ளாச்சிக்கு குடும்பத்தை பார்க்க செல்லும் சமுத்திரகனியை சர்வேஸ்வரன் தன் ஆட்களை வைத்து கொல்ல முயற்சி செய்கிறார்.

அப்போது அடிப்பட்டு உயிருக்கு போராடும் சூழ்நிலையில் தன் நண்பரான ரகசிய போலீஸ் மற்றும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான சரத்குமாருக்கு போன் செய்து சர்வேஸ்வரனின் ஆட்கள் என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று கூறுகிறார். சமுத்திரகனியை காப்பாற்ற சரத்குமார் செல்வதற்குள் சர்வேஸ்வரனின் ஆட்கள் சமுத்திரகனியை கெமிக்கல் வெடிமருந்து மூலம் கொலை செய்து விடுகிறார்கள். இறந்த நிலையில் கிடக்கும் சமுத்திரகனியை பார்த்த சரத்குமார், சர்வேஸ்வரனை எப்படியாவது கைது செய்ய முயற்சிக்கிறார். போலீஸ் அதிகாரிகளிடம் சென்று சர்வேஸ்வரனை எண்கவுண்டர் செய்வதற்கு அனுமதி வாங்குகிறார். இதனால் கும்பகோணத்திற்கு செல்லும் சரத்குமார், இமான் அண்ணாச்சியிடம் வாட்டர் சப்ளையராக சேருகிறார். நேரம் கிடைக்கும் போது என்கவுண்டர் செய்யலாம் என்று அவரை நோட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் சர்வேஸ்வரன் வெளிநாட்டினருடன் சேர்ந்து இந்தியாவின் பல இடங்களில் தான் தயாரிக்கும் கெமிக்கல் வெடிகுண்டை வைத்து நாச வேலைகளில் ஈடுபட இருப்பது சரத்குமாருக்கு தெரியவருகிறது. இறுதியில் சரத்குமார், சர்வேஸ்வரனை என்கவுண்டர் செய்தாரா? நாச வேலைகளை தடுத்தாரா? என்பதே மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரத்குமார் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லனாக வரும் சரத்குமார், சர்வேஸ்வரன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். இவருடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அவருக்கே உரிய பாணியில் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக சர்வேஸ்வரனை என்கவுண்டர் செய்ய முயற்சிக்கும் இவரது நடிப்பு அருமை. தம்பிராமையாவுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும் படியாக உள்ளது. முறைப்பெண்ணாக வரும் மீராநந்தன், குடும்ப பெண்ணாக மனதில் நிற்கிறார். சரத்குமார் ஆக்‌ஷனில் ஆர்வத்தோடு இருப்பதால் ரொமன்ஸ் செய்ய வாய்ப்புகள் குறைவாகவே அமைத்திருக்கிறது. போலீசாக வரும் ஓவியா கவர்ச்சியில் தாராளம் காண்பித்திருக்கிறார். வின்சென்ட் அசோகன், சமுத்திரகனி ஆகியோர் நேர்மையான போலீஸ் அதிகாரியாக மனதில் நிற்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ராதாரவியின் வில்லத்தனம் வியப்படைய வைக்கிறது. இமான் அண்ணாச்சி, தம்பிராமையா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் நகைச்சுவையால் கலகலப்பூட்டியிருக்கிறார்கள்.

இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தன்னுடைய வழக்கமான பாணியையே இப்படத்தில் கையாண்டிருக்கிறார். நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் படமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். சரத்குமாருக்கு இரண்டு வேடங்களை கச்சிதமாக பொருந்தும் அளவிற்கு கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறார். குறிப்பாக இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறார். ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சரத்குமார், ஓவியா டூயட் பாடல் கேட்கவும், அதை என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்ததும் அருமை. ஆக்‌ஷன் காட்சிகளில் இவருடைய ஒளிப்பதிவு அருமை.

மொத்தத்தில் ‘சண்டமாருதம்’ அதிரடி……….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி