கில்லாடி (2015) திரை விமர்சனம்…

விளம்பரங்கள்

திருச்சியில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பரத், தந்தை, தாய், அண்ணன், அண்ணி என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் படித்து வரும் பரத் தன் நண்பனின் காதலுக்கு உதவி செய்கிறார். தன் நண்பன் காதலிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளை மண்டபத்தில் இருந்து அழைத்து சென்று திருமணம் செய்து வைக்கிறார். இதனால் போலீஸ் அதிகாரி பரத் மீது கோபமடைகிறார். அதே ஊரில் மிகவும் வசதியாக இருக்கும் ரோஜாவின் மகளான நாயகி நிலா வேறொரு கல்லூரியில் படித்து வருகிறார். நிலாவிற்கு யார் காதல் கடிதம் கொடுத்தாலும் ரோஜாவும் நிலாவின் மாமாவான வின்சென்ட் அசோகனும் அடித்து நொறுக்குகிறார்கள்.

ஒருநாள் ரோஜா, நிலாவை வின்சென்ட் அசோகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இதனை விரும்பாத நிலா, திருமணத்தை தள்ளி வைக்கும் முயற்சியாக, தான் ஒருவரை காதலிப்பதாக பொய் சொல்கிறார். இதனை நம்பி ரோஜாவும் வின்சென்ட் அசோகனும் நிலா காதலிக்கும் பையனை தேடி வருகிறார்கள்.எந்த பையன் என்று தெரியாத நிலையில், நிலாவிற்கும் வின்சென்ட் அசோகனும் நிச்சயார்த்தம் செய்து விடுகிறார் ரோஜா. இதனால் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் நிலா. வின்சென்ட் அசோகன் தன் ஆட்களுடன் நிலாவை தேட ஆரம்பிக்கிறார். நிலா செல்லும் வழியில் பரத்திடம் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறுகிறார். இதை பார்க்கும் வின்சென்ட் அசோகன், பரத்தான் நிலாவின் காதலர் என்று தவறாக நினைக்கிறார். நிலாவை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு பரத் வீட்டிற்கு செல்வதற்குள், வின்சென்ட் அசோகன் பரத்தின் வீட்டிற்கு சென்று சூறையாடுகிறார். மேலும் பரத்தின் தங்கையை அழைத்து சென்று விடுகிறார். வீட்டிற்கு வரும் பரத் நடந்ததை கேட்டு கோபமடைந்து ரோஜா வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு ரோஜா நிலாவை கேட்கிறார். என்னவென்று தெரியாத பரத் குழம்பிப் போகிறார். பின்னர் லிப்ட் கேட்டு வந்த பெண்தான் நிலா என்று தெரிந்துக் கொள்கிறார். மேலும் ரோஜாவிடம் எனக்கு அந்த பெண் யார் என்று தெரியாது, லிப்ட் தான் கொடுத்தேன் என்று கூறுகிறார். இதை ஏற்காத ரோஜா எப்படியாவது நிலாவை கண்டுபிடித்து கொடுத்தால்தான் உன் தங்கையை விடுவேன் என்று கூறுகிறார்.
உடனே பரத் நிலாவை தேடி கண்டுபிடித்து ஒரு வீட்டில் அடைத்து வைக்கிறார். பின்னர் ரோஜா வீட்டிற்கு சென்று தங்கையை விடுவிக்கிறார். பின்னர் நிலாவை விடுவிக்க மறுக்கிறார் பரத். இதுவரை நிலாவை யார் என்று எனக்கு தெரியாது. நான் காதலிப்பதாக நினைத்து என் குடும்பத்தை கஷ்டப்பட வைத்துவிட்டீர்கள். இனிமேல்தான் நிலாவை நான் காதலிக்க போகிறேன் உங்களால் முடிந்ததை பாருங்கள் என்று சவால் விட்டு செல்கிறார் பரத்.இறுதியில் பரத் தன் சவாலில் வென்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பரத், ஆர்ப்பாட்டமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடனம், சண்டைக் காட்சிகளில் சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி நிலா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார்.

நிலாவிற்கு அம்மாவாக நடித்திருக்கும் ரோஜா ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு சில இடங்களில் இவரது நடிப்பு ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது. கிளைமாக்சில் இவரது நடிப்பு ஏற்கும்படியாக இல்லை. வின்சென்ட் அசோகன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பல வேடங்களில் தோன்றி காமெடியால் கருத்து சொல்லியிருக்கிறார் விவேக். சிரிப்பு வரவில்லை என்றாலும் கருத்து ஏற்கும்படி இருக்கிறது.வழக்கமான காதல் கதையை கையில் எடுத்துக் கொண்ட இயக்குனர் ஏ.வெங்கடேஷ், அதில் வித்தியாசமான திரைக்கதையை அமைக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அது பெரியதாக எடுபடவில்லை. லாஜிக் இல்லாத காட்சிகளை தவிர்த்திருக்கலாம். பரத் ஒரு டேக்கில் ஒரு மாதிரியான உடற்கட்டும், அடுத்த டேக்கில் வேற மாதிரியான உடற்கட்டுமாக இருக்கிறார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்ததால் இந்த வித்தியாசம் தெரிகிறது. இதை சரி செய்திருக்கலாம். படம் பார்க்கும்போது மற்றொரு இயக்குனரின் சாயல் தெரிகிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல் அனைத்தும் சுமார் ரகம். இரண்டு பாடல்கள் மட்டும் குத்தாட்டம் போட வைக்கிறது. பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு பெரிதாக அமையவில்லை.

மொத்தத்தில் ‘கில்லாடி’ அதிரடி…………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: