அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ராஜபக்சே வீட்டில் அதிரடி சோதனை!…

ராஜபக்சே வீட்டில் அதிரடி சோதனை!…

ராஜபக்சே வீட்டில் அதிரடி சோதனை!… post thumbnail image
கொழும்பு:-இலங்கையில் கடந்த 8ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்றார். ஆட்சி மாறியதும் இலங்கையில் காட்சிகளும் மாற தொடங்கி விட்டன. ராஜபக்சே அதிபராக இருந்த போது அவரும், குடும்பத்தினரும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராஜபக்சே குடும்பத்தினர் ஆடம்பர வாழ்க்கை வசதி குறித்த செய்திகளை இலங்கை டெலிவிஷன் ஒளிபரப்பி வருகின்றன. ஏர்கண்டிசன் (குளிர்சாதனம்) வசதியுடன் கூடிய கழிவறைகள், அரசின் அதிகார பூர்வ இல்லத்தில் டிஜிட்டல் வீடியோவுடன் கூடிய திரையரங்கு போன்றவற்றை படம் பிடித்து காட்டினர்.

தேர்தல் பிரசாரத்தின் போது ராஜபக்சேவின் மகன்களுக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த குதிரைகள், பந்தய கார்கள் இருப்பதாகவும் எதிர்க் கட்சிகள் புகார் தெரிவித்தனர்.இந்த நிலையில், ராஜபக்சே அவரது சொந்த கிராமத்தில் உள்ள வீட்டில் கடல் விமானம் மற்றும் லாம்போர்கினி பந்தய காரை பதுங்கி மறைத்து வைத்திருப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. அதை தொடர்ந்து கோர்ட்டு வாரண்டு உத்தரவு படி நேற்று தெற்கு மாகாணத்தில் ராஜபக்சேவின் சொந்த ஊரான தங்காலே என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஆனால், புகாரில் தெரிவித்தபடி அங்கு எதுவும் கிடைக்கவில்லை. இந்த தகவலை போலீஸ் செய்தி தொடர்பாளர் அஜித் ரோஹனா தெரிவித்தார். இது குறித்து ராஜபக்சேவின் மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபக்சே கூறியதாவது:–

‘லம்பார்கினி’ பந்தய கார் இருப்பதாக கூறப்பட்ட பொய் புகாரின் அடிப்படையில் தங்காலேவில் உள்ள எங்களது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். எங்களை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இச்சோதனை நடத்தப்பட்டது.எங்கள் வீடுகளில் மட்டுமின்றி நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. இதனால் உதவியாளர்கள் வீடுகளுக்கும் செல்ல முடிய வில்லை. ஏனெனில் அங்கும் சோதனை நடக்கிறது. சோதனையின் போது பந்தய கார் மற்றும் கடல் விமானம் எதுவும் போலீசாருக்கு கிடைக்க வில்லை. சிறுவயது பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் ஒரு கால்மிதி படகு மட்டுமே இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி