செய்திகள்,திரையுலகம் ஆய்வுக்கூடம் (2015) திரை விமர்சனம்…

ஆய்வுக்கூடம் (2015) திரை விமர்சனம்…

ஆய்வுக்கூடம் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். மூளை மாற்று அறுவை சிகிச்சை என்னும் ஆராய்ச்சி மூலம் மனிதர்களுக்கு மூளையை மாற்றி சிறந்த அறிவான மூளையை நாம் இழக்காமல் இருக்க முடியும் என்று கூறி அரசிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு அரசு இது மனிதர்களின் உயிர் சம்பந்தப் பட்டது. ஆதலால் இதை அனுமதிக்க கூடாது என்று மறுத்து விடுகிறது. இதனால் வேதனைப்படும் பாண்டியராஜன், இந்த ஆராய்ச்சியை எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். இதற்காக தன் உதவியாளர் மூலம் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை கடத்தி வருகிறார். இன்னொருவராக பாண்டியராஜன் வழியில் செல்லும் போது பாக்சிங் வீரர் ஒருவரை தன் காரில் தெரியாமல் இடித்து விடுகிறார். மயங்கி விழும் அவரை தன் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.

இரண்டு மனிதர்கள் கிடைத்த நிலையில், இருவருக்கும் மூளை மாற்று அறுவை சிகிச்சையை திருட்டுதனமாக செய்கிறார் பாண்டியராஜன். மனநிலை பாதிக்கப்பட்டவர் மூளையை பாக்சிங் வீரருக்கும், பாக்சிங் வீரர் மூளையை மனநிலை பாதிக்கப்பட்டவருக்கும் மாற்றுகிறார். இதற்கிடையில் மனநிலை பாதிக்கப்பட்டவரையும் பாக்சிங் வீரரையும் அவர்களின் குடும்பத்தினர் தேட ஆரம்பிக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர் மூளையை பொருத்திய பாக்சிங் வீரர் இறந்து விடுகிறார். பாக்சிங் வீரர் மூளையை பொருத்திய மனநிலை பாதிக்கப்பட்டவர் குணமாகிறார். மூளை மாற்று சிகிச்சை பெற்ற இவரது வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? பாண்டியராஜனின் ஆராய்ச்சி வெற்றி பெற்றதா? என்பதே மீதிக்கதை. படத்தில் பாண்டியராஜன் சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கம் போல் காமெடி கதாபாத்திரம் இல்லாமல் சீரியசான கதாபாத்திரத்தை ஏற்று எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மனநிலை பாதிக்கப்பட்டவராக வரும் கணபதி நடிக்க முயற்சி செய்திருக்கிறார். முதற்பாதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடித்திருப்பதால், குணமான பின்பும் இவருடைய நடிப்பு அதேபோல் இருக்கிறது. நாயகிகளாக நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
வித்தியாசமான கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் அன்பரசன், சிறந்த கதாபாத்திரங்களை அமைத்திருந்தால் தேர்வு பெற்றிருப்பார். முதற்பாதி சோர்வாக சென்றாலும் பிற்பாதியில் கொஞ்சம் சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார். திரைக்கதை முழுவதும் காமெடியாக அமைத்திருக்கிறார். ஆனால் பெரிதாக எடுபடவில்லை. குறிப்பாக ஐந்து மொட்டையர்கள் செய்யும் காமெடி சிரிப்பே வரவில்லை. ரமேஷ் கிருஷ்ணாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசை சொல்லும் அளவிற்கு இல்லை. ஒளிப்பதிவாளர் எஸ்.மோகன் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘ஆய்வுக்கூடம்’ முயற்சி………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி