ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்!…

விளம்பரங்கள்

ஜம்மு:-காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி–28, பா.ஜ.க–25, தேசிய மாநாட்டு கட்சி–15, காங்கிரஸ்–12 இடங்களில் வெற்றி பெற்றன. காஷ்மீரில் உள்ள இந்த 4 கட்சிகளும் எதிரும் புதிருமான கொள்கைகளைக் கொண்டவை. இதனால் புதிய ஆட்சி அமைவதில் காஷ்மீரில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதுவரை எந்த கட்சியும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை.

காஷ்மீர் கவர்னர் வோரா, பா.ஜ.க., ஜனநாயக மக்கள் கட்சி தலைவர்களை அழைத்து பேச்சு நடத்தினார். இதையடுத்து அந்த இரு கட்சிகளும் கூட்டணி மந்திரி சபை அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், இதுவரை அந்த இரு கட்சிகளிடமும் ஒருமித்த முடிவு உருவாகவில்லை.
முதல்–மந்திரி பதவியை முதலில் ஏற்பது யார் என்பதில் அந்த கட்சிகளிடம் பிடிவாதம் காணப்பட்டது. பிறகு மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் முப்தி முகம்மது சயீதுக்கு முதல்–மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க பா.ஜ.க. சம்மதித்தது. ஆனால், குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பதில் இரு கட்சிகளிடமும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதனால், கூட்டணி ஆட்சி அமைவதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை தொடர்வதால் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரக்கூடிய நிலை உருவானது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு கவர்னரை சந்தித்த காபந்து முதல் அமைச்சர் உமர் அப்துல்லா, எல்லை சம்பவம் மற்றும் கனமழையால் பாதித்த மக்களுக்கு இடைக்கால முதல்வரால் ஒன்றுமே செய்யமுடியாது. நிரந்தர அரசால் மட்டுமே நல்லது செய்ய முடியும். ஆகையால், இடைக்கால முதல்வர் பதவியில் இருந்து விலக இருப்பதாக அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதனால், ஜம்மு-காஷ்மீர் அரசியல் சூழ்நிலை குறித்து கவர்னர் வோரா, மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில், இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்திருந்தார்.காஷ்மீர் சட்டசபையின் 6 ஆண்டு பதவிக்காலம் வருகிற 18–ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்த 9 நாட்களுக்குள் புதிய ஆட்சி பொறுப்பேற்றாக வேண்டும். எனவே, இதற்குள் சுமூக முடிவை எட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்களும் பா.ஜ.க. தலைவர்களும் தீவிரமாக திரைமறைவு பேச்சுகளில் ஈடுபட்டனர்.

இதிலும் வெற்றி கிடைக்காததால் இங்கு விரைவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்ற யூகம் அரசியல் பார்வையாளர்களிடையே நிலவி வந்தது.இந்நிலையில், கவர்னர் மோதிலால் வோராவின் பரிந்துரையை ஏற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று மாலை ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, இன்று முதல் இங்கு கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் 92-ன்படி, ஒரு மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயந்திரம் செயலிழந்து விட்டால் அங்கு ஜனாதிபதியின் மேற்பார்வையில் அம்மாநில கவர்னரின்கீழ் ஆட்சி நடத்தப்படும். அவ்வகையில், கடந்த 1977 முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சந்திக்கும் ஆறாவது கவர்னர் ஆட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: