செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 10ம் தேதி தாக்குதல் நடக்கும்: வாசகத்தால் பரபரப்பு!…

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 10ம் தேதி தாக்குதல் நடக்கும்: வாசகத்தால் பரபரப்பு!…

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 10ம் தேதி தாக்குதல் நடக்கும்: வாசகத்தால் பரபரப்பு!… post thumbnail image
மும்பை:-மும்பை சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் நுழைவு வாயில் அருகே ஆண்களுக்கான கழிவறை உள்ளது. நேற்று முன்தினம் மாலை துப்புரவு ஊழியர் ஒருவர் கழிவறையை சுத்தம் செய்ய சென்றார். அப்போது கழிவறை சுவரில் ‘சி.எஸ்.ஐ. அட்டாக் பை ஐ.எஸ். ஐ.எஸ். 10.01.15’ (மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 10-ந்தேதி ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தும்) என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த துப்புரவு ஊழியர் உடனே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் விரேந்திரா மிஸ்ரா, உதவி கமிஷனர் மதுக்கர் சங்கே உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். விமான நிலையத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அந்த வாசகத்தை கழிவறை சுவரில் எழுதி சென்றது யார்?… என்பதை கண்டுபிடிக்க விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. விமான நிலையத்தை சுற்றிலும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன் கொல்கத்தா ஏர் இந்தியா விமான நிலைய அலுவலகத்திற்கும், அதை தொடர்ந்து தானே மற்றும் மும்பையில் உள்ள அந்த நிறுவன அலுவலகத்துக்கும் மர்ம ஆசாமிகள் போனில் விமானங்களை கடத்த போவதாக மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் மர்ம ஆசாமிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் மதுக்கர் சங்கே கூறுகையில், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை யொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மும்பையில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி