சசிதரூருக்கு 10 கேள்விகள் டெல்லி போலீசார் தயாரித்துள்ளனர்!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஆண்டு டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் அவர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. என்றாலும் அவர் மரணம் அடைவதற்கு முன்பு சசிதரூருடன் சண்டை போட்டிருந்ததால் சந்தேகம் நீடித்தப்படி இருந்தது.

சுனந்தா புஷ்கர் மரணத்தில் நிலவும் மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதற்காக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீவிர விசாரணைக்குப்பிறகு சுனந்தா இயற்கையாக மரணம் அடையவில்லை என்றும் அவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக நேற்று முன்தினம் டெல்லி போலீசார் அறிவித்தனர். இதை உறுதிபடுத்த சுனந்தாவின் உடல் உள் உறுப்புகளை இங்கிலாந்து அல்லது அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் சுனந்தாவுக்கு நெருக்கமான 6 பேரிடம் விசாரணையை தீவிரப்படுத்த டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் திருவனந்தபுரத்தில் சுனந்தா சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தவிர சசிதரூரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். சுனந்தா உடலில் 15 இடங்களில் காயம் இருந்தது. அவர் கையில் பொலேனியம் விஷ ஊசி போடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சந்தேகங்களை உறுதிபடுத்த 10 கேள்விகளை டெல்லி போலீசார் தயார் செய்துள்ளனர். இந்த 10 கேள்விகளும் விரைவில் சசிதரூரிடம் கேட்கப்பட உள்ளது. அதன் பிறகு டெல்லி போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: