உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி – ஒரு பார்வை!…

விளம்பரங்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பற்றிய ஒரு பார்வை:–

டோனி (வயது 33): கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், 2011–ல் உலக கோப்பையை பெற்று தந்தவர். ஆட்டத்தை நிறைவு செய்வதில் வல்லவர். அமைதி காப்பது பிளஸ்பாயிண்டாக இருக்கிறது. ஆட்டம்–250, ரன்கள்–8,192, சராசரி– 52.85, சதம்–9, அரைசதம்- 56, அதிகபட்சம்: 183.

வீராட் கோலி (26): பேட்ஸ்மேன். சிறந்த அதிரடி வீரர். ஆக்ரோஷமான இவர் இன்று உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடியவர். ஆட்டம்–146, ரன்கள்– 6,208. சராசரி–52.61. சதம்–21, அரைசதம்–33, அதிகபட்சம்–183.

ஷிகார் தவான் (29): பேட்ஸ்மேன். ஒருநாள் போட்டியில் சிறந்த தொடக்க வீரர். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடினாலும் தேர்வுக்குழு நம்பிக்கை வைத்து தேர்வு செய்துள்ளது. ஆட்டம்–49, ரன்கள்–2,046, சராசரி–45.46, சதம்–6, அரைசதம்–11, அதிகபட்சம்–119.

ரோகித் சர்மா (27): பேட்ஸ்மேன். ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தவர். இரண்டு முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ஆவார். தொடக்கம் மந்தமாக இருந்தாலும் நேரம் செல்ல செல்ல அதிரடியை வெளிப்படுத்தக் கூடியவர். ஆட்டம்–126, ரன்கள்–3,752, சராசரி–37.89, சதம்–5, அரைசதம்–23, அதிகபட்சம்–264.

ரெய்னா (28): பேட்ஸ்மேன். ஒருநாள் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களில் ஒருவர். சிறந்த அதிரடி வீரரான இவர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். ஆட்டம்–203, ரன்கள்–5,051, சராசரி–35.82, சதம்–4, அரைசதம்–32, அதிகபட்சம் –116.

ரகானே (26): பேட்ஸ்மேன். அனைத்து ஆடுகளத்திலும் விளையாடக் கூடிய திறமையானவர். மும்பையை சேர்ந்த இவர் மிடில் வரிசையிலும், தொடக்க வீரராகவும் ஆடக்கூடியவர். ஆட்டம்–42, ரன்கள்–1,584, சராசரி 29.28, சதம்–2, அரைசதம்–7, அதிகபட்சம்–111.

ஜடேஜா (26): ஆல்ரவுண்டர். சிறந்த அதிரடி வீரர். ஆட்டத்தை நிறைவு செய்வதில் வல்லவர். தனது சுழற்பந்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர். தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். ஆட்டம்–109, ரன்கள்–1,691. சராசரி–34.51, அரைசதம்–10, அதிகபட்சம்–87, விக்கெட்–134, சிறந்த பந்துவீச்சு –5/36.

அம்பதி ராயுடு (29): பேட்ஸ்மேன். கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார். விக்கெட் கீப்பராகவும் பணியாற்றக் கூடியவர். மிடில் ஆர்டரில் நன்றாக ஆடக்கூடியவர். ஆட்டம்–24, ரன்கள்–685, சராசரி–45.66, சதம்–1, அரைசதம்–5, அதிகபட்சம்–121.

அஸ்வின் (28): பந்து வீச்சாளர். சென்னையை சேர்ந்த இவர் 2–வது முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறார். இந்தியாவின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீரர். நேர்த்தியாக பந்து வீசக்கூடியவர். ஆட்டம்–87, விக்கெட்–119, ஒரு ஓவர் ரன் 4.89, சிறந்து பந்துவீச்சு–3/24

இஷாந்த் சர்மா (26): பந்து வீச்சாளர். ஒருநாள் போட்டியில் நிலையாக இடம் பெற்றது இல்லை. ஆனால் இவரது அனுபவம் அணிக்கு கை கொடுக்கும். ஆட்டம்–75, விக்கெட்–106, ஒரு ஓவர் ரன்–5.69, சிறந்த பவுலிங்–4/34.

புவனேஷ்வர் குமார் (24): பந்து வீச்சாளர். சுவிங் பந்துவீச்சில் பலம் பெற்றவர். பழைய பந்தில் விக்கெட்டுகளை கைப்பற்ற திணறுபவர். இவரது உடல் தகுதி இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

முகமது ஷமி (24): பந்து வீச்சாளர். விக்கெட்டுகளை கைப்பற்றக்கூடிய திறமையான வேகப்பந்து வீரர். மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர் ரன்களை அதிகமாக விட்டுக் கொடுப்பவர். ஆட்டம்–36, விக்கெட்–68, ஒரு ஓவர் ரன்–5.74, சிறந்த பந்து வீச்சு– 4/36.

உமேஷ் யாதவ் (27): பந்து வீச்சாளர். நாக்பூரை சேர்ந்த இவர் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இவரும் ரன்களை வாரி கொடுப்பவர். ஆட்டம்–38, விக்கெட்–47, ஒரு ஓவர் ரன்–5.89, சிறந்த பவுலிங்– 4/53.

ஸ்டூவர்ட் பின்னி (30): ஆல் ரவுண்டர். கர்நாடகாவை சேர்ந்த இவர் சுவிங் பவுலிங் செய்வதில் கெட்டிக்காரர். பின்கள வரிசையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். ஆட்டம்– 6, ரன்கள்–40, சராசரி–13.33, விக்கெட்–9, ஒரு ஓவர் ரன்–4.55, சிறந்த பந்துவீச்சு– 6/4.

அக்சர் படேல் (20): ஆல்ரவுண்டர். இளம் வீரரான இவர் இடதுகை சுழற்பந்து வீரர். நேர்த்தியாக பந்து வீசக்கூடியவர். பேட்டிங்கில் திறமையை வெளிப்படுத்தக் கூடியவர். ஆட்டம்: 9, ரன்கள்–40, விக்கெட்–14, ஒரு ஓவர் ரன்–4.49, சிறந்த பந்து வீச்சு– 3/40.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: