அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஜார்கண்டில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது: காஷ்மீரில் இரண்டாம் இடத்தை பிடித்தது!…

ஜார்கண்டில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது: காஷ்மீரில் இரண்டாம் இடத்தை பிடித்தது!…

ஜார்கண்டில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது: காஷ்மீரில் இரண்டாம் இடத்தை பிடித்தது!… post thumbnail image
ஜம்மு:-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கடந்த மாதம் 25–ந்தேதி முதல் கடந்த 20–ந்தேதி வரை 5 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது.காஷ்மீரில் உள்ள 87 தொகுதிகளில் சராசரியாக 65 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில் சராசரியாக 66.5 சதவீத ஓட்டுகள் பதிவானது. இரு மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு ஓட்டுகள் எண்ணிக்கைத் தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்களும் பிறகு மின்னணு எந்திரங்களில் பதிவான ஓட்டுக்களும் எண்ணப்பட்டன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 24 மையங்கள், காஷ்மீரில் 22 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.

8.30 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியத் தொடங்கியது. கருத்துக் கணிப்புகளில் வெளியானது போல தொடக்கத்தில் இருந்தே ஜார்க்கண்ட், காஷ்மீர் இரு மாநிலங்களிலும் பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றது.ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய முதல் 1 மணி நேரத்தில் ஜார்க்கண்ட்டில் 21 இடங்களிலும் காஷ்மீரில் 10 இடங்களிலும் பா.ஜ.க. முன்னிலைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி இரு மாநிலங்களிலும் ஆரம்பத்தில் இருந்தே பின்தங்கி காணப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 41 இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். இந்த 41 இட எண்ணிக்கையை பா.ஜனதா கட்சி மிக மிக எளிதாக பெற்றுள்ளது.காலை 9.30 மணிக்கெல்லாம் 81 இடங்களின் முன்னணி நிலவரம் தெரிய வந்தது. அப்போது பா.ஜனதா கட்சி 45–க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. இதன் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதுமே உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றியானது சரித்திர சாதனைகளை எல்லாம் மிஞ்சும் வகையிலான இமாலய வெற்றியாக மாறியுள்ளது. பீகார் மாநிலத்தில் இருந்து 2000–ம் ஆண்டில் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலமாகும். சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அந்த மாநிலத்தில் தனி செல்வாக்குடன் இருந்தது.முதலில் பா.ஜ.க.வுடனும், பிறகு காங்கிரசுடனும் கூட்டணி அமைத்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மீது அம்மாநில மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதன் காரணமாக கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது. முக்தி மோர்ச்சா கட்சிக்கு 2 இடங்களே கிடைத்தது.தற்போது சட்டசபை தேர்தலிலும் அந்த மாநிலத்தில் பா.ஜ.க. இமாலய வெற்றியை ருசித்துள்ளது. அது மட்டுமின்றி முதன் முதலாக ஜார்க்கண்டில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது.காஷ்மீர் மாநில சட்டசபையில் மொத்தம் 87 இடங்கள் உள்ளன. அங்கு தனி மெஜாரிட்டியுடன் ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமானால் 44 இடங்கள் வேண்டும்.

தேர்தல் சமயத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் காஷ்மீரில் எந்த ஒரு கட்சிக்கும் தனித்து ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது. இழுபறி நிலையே ஏற்படும் என்று தெரிய வந்திருந்தது. ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடங்கி முன்னணி நிலவரம் வரத் தொடங்கியதும் காஷ்மீரில் யாருக்கும் 44 இடங்களை பிடிக்கும் அளவுக்கு வெற்றி கிடைக்காது என்பது உறுதியானது.அம்மாநிலத்தில் பா.ஜ.க., தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி ஏற்பட்டு இருந்தது.மக்கள் ஜனநாயக கட்சியும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பா.ஜ.க. 26 இடங்களை பிடித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க. இவ்வளவு பெரிய வெற்றியை பெறுவது இதுவே முதல் தடவையாகும்.காஷ்மீரில் பா.ஜ.க.வும், மக்கள் ஜனநாயக கட்சியும் சேர்ந்து கூட்டணி மந்திரி சபை அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓட்டு எண்ணிக்கை முழுமையாக முடிந்த பிறகு இதுபற்றி உறுதியாக தெரிய வரும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி