செய்திகள்,முதன்மை செய்திகள் தினத்தந்தி துபாய் பதிப்பு தொடக்க விழா: சிவகார்த்திகேயன், சினேகா, பிரசன்னா பங்கேற்பு!…

தினத்தந்தி துபாய் பதிப்பு தொடக்க விழா: சிவகார்த்திகேயன், சினேகா, பிரசன்னா பங்கேற்பு!…

தினத்தந்தி துபாய் பதிப்பு தொடக்க விழா: சிவகார்த்திகேயன், சினேகா, பிரசன்னா பங்கேற்பு!… post thumbnail image
துபாய்:-தமிழ் பத்திரிகைகளில் அதிக வாசகர்களை கொண்டு சிறப்பான இடத்தை ‘தினத்தந்தி’ பிடித்திருக்கிறது. ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூர், மும்பை, திருப்பூர் ஆகிய 16 நகரங்களில் இருந்து ‘தினத்தந்தி’ வெளி வருகிறது. 17-வது பதிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையை ‘தினத்தந்தி’ பெற்றுள்ளது.

வளைகுடா பகுதியில் அசைக்க முடியாத மையமாக திகழும் ஐக்கிய அரபு அமீரகத்தில், ஏராளமான இந்தியர்களும், குறிப்பாக தமிழர்களும் வசிக்கிறார்கள். இவர்களின் நீண்டகால கனவை பூர்த்தி செய்யும் வகையில் ‘தினத்தந்தி’ தனது 17-வது பதிப்பை துபாய் நகரில் தொடங்கி உள்ளது. இதற்கான தொடக்க விழா துபாய் அல்கூஸ் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கலீஜ் டைம்ஸ் பத்திரிகை (கலதாரி பிரிண்டிங் மற்றும் வெளியீட்டு நிறுவனம்) அலுவலகத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கலந்து கொண்டு எந்திரத்தின் பொத்தானை அழுத்தி தொடங்கி வைத்ததுடன் முதல் பிரதியையும் வெளியிட்டார். நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரசன்னா, நடிகை சினேகா ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர்.விழாவில் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனின் மகன் பா.சிவந்தி ஆதித்தன், கலீஜ் டைம்ஸ் முதன்மை செயல் அலுவலர் காலித் சுலைமான், துணை தலைவர் சாகிர் அஹமது, எக்சிகியூட்டிவ் எடிட்டர் பேட்ரிக் மைக்கேல், இந்திய கான்சுலேட் ஜெனரல் மீடியா கன்சல் அனிதா நந்தினி, தவ்சீல் நிறுவன மேலாண்மை செயல் இயக்குனர் ஜமால் சல்மான் கவுர், முதன்மை வணிக அலுவலர் நோபல் ஆர்.பொலாத், லேண்ட் மார்க் ஓட்டல்கள் மற்றும் ஜீனத் ரியல் எஸ்டேட் குழும இயக்குனர்கள் சையத் முகம்மது சாதிக் மற்றும் ஹமீது மொய்னுதீன் சாதிக், தொழில் அதிபர் ஜே.எம்.இக்பால், சங்கனி நிறுவன இயக்குனர் கவுரிசங்கர், ‘ஹலோ எப்.எம்.’ ஆர்ஜேக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

‘தினத்தந்தி’ துபாய் பதிப்பின் இதழ், இன்று முதல் தினமும் காலையில் அமீரகம் முழுவதும் கிடைக்கும். ‘தினத்தந்தி’ துபாய் பதிப்பின் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளுடன் உள்ளூரில் நடக்கும் அனைத்து செய்திகளும் உடனுக்குடன் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கும்.‘தினத்தந்தி’, தனது 17-வது பதிப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் தொடங்கி இருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருக்கும் தினத்தந்தி நாளிதழ் தனது 17-வது பதிப்பை துபாய் நகரிலிருந்து வெளியிடுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 73 ஆண்டுகளாக தினத்தந்தி நாளிதழ் பெற்றுவரும் பரிணாம வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. அச்சு ஊடகத்துறையில் அதன் காலடிச்சுவடுகள் வரலாற்றுப் பக்கங்களில் காவியங்களாக மிளிர்கின்றன என்றால் அது மிகையாகாது.காலமாறுதலுக்கு ஏற்பவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும் வாசகர்களின் தேவையறிந்து நாள்தோறும் புத்தாடை பூண்டதைப்போல பொலிவோடு தன்னை மாற்றிக்கொண்டுவருவது தினத்தந்தியின் தனிச்சிறப்பு. எனவேதான், தமிழ் நாளிதழ்களில் அதிக வாசகர்களைக் கொண்டு சாதனை படைத்து வருகிறது.

துபாயில் பதிப்பைத் தொடங்கும் இந்த இனிய நாளில், தினத்தந்தியின் நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் தீர்க்கதரிசனத்தையும், டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உழைப்பையும் கனவையும் தலைமுறைகளைத்தாண்டி கொண்டு செல்லும் பணியில் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கு என் பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.ஐக்கிய அரபு அமீரகம் பதிப்பைத்தொடர்ந்து, உலகமெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகள் அனைத்திலும், தமிழர்கள் அனைவரின் கரங்களிலும், தினத்தந்தி தவழும் காலமும் வெகுவிரைவில் வரவேண்டும் என்று எனது மனமார்ந்த பிரார்த்தனையை இறைவனிடம் வைத்து, மீண்டும் தினத்தந்திக்கு என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, ‘ தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தமிழக மக்களிடம் பத்திரிகைப் படிக்கும் வழக்கத்தை ஆழமாக உருவாக்க தந்தி பத்திரிகை ஏற்படுத்தினார். அவரது மகன் பா.சிவந்தி ஆதித்தனார் தினத்தந்தி இதழை மாவட்டந்தோறும் பதிப்பிக்கும் பணியில் மாபெரும் வெற்றி பெற்றார்.

இதன் காரணமாக மாவட்டத்தில் நடக்கும் செய்திகளை அந்தந்த பகுதி மக்கள் விரைவாகவும், சிறப்பாக அறிந்து கொள்ள அது பெரும் உதவியாக இருந்தது. அவரது வழியில் தற்போது நிர்வாக இயக்குநராக இருக்கும் அவரது புதல்வர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தனது முதல் வெற்றியாக பாரதத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் மனதில் புதிய இடம் பிடிக்கும் வகையில் துபாய் நாட்டில் தினத்தந்தியின் பதிப்பை முதன்முதலாக தொடங்கி இருப்பது தமிழர்களை தலைநிமிர செய்துள்ளது.’ என்று கூறியுள்ளார்.பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘உலக மக்களின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்று பாமரனும் தமிழ் படிக்க உதவிய தினத்தந்தி நாளிதழ் துபாய்நகரில் தனது 17 -வது பதிப்பினை தொடங்கி உள்ளதற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடல் கடந்து வாழும் தமிழ் மக்கள் தாய்மொழியாம், தமிழ் நாளிதழை படிக்கவும், நம் நாட்டின் செய்தியை உடனுக்குடன் அறிந்திடவும் தொடங்கப்பட்டுள்ள தினத்தந்தி இதழ் மேலும் தன்னுடைய பதிப்பை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பகுதிகளில் தொடங்கிட வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.இதேபோன்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பண்பாட்டுக்கழகத்தின் தலைவர் என்.மாரிமுத்து, விஜயா பப்ளிகேஷன்ஸ் வெளியீட்டாளர் பி.விஸ்வநாதரெட்டி, மக்கள் உரிமைக்களம் செயலாளர் இனியன் ஜான் ஆகியோரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி