செய்திகள்,திரையுலகம் நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) திரை விமர்சனம்…

நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) திரை விமர்சனம்…

நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் மனோஜ் தேவதாஸ் சிறுவயது முதலே குத்துச்சண்டையின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். எப்படியாவது குத்துச்சண்டை வீரராக வேண்டும் என்ற ஆசையோடு இருந்து வருகிறார். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்து நாயகன் அனாதையாகிவிட, அவனை அந்த பகுதியில் குத்துச்சண்டை பயிற்சியாளராக இருக்கும் ஜார்ஜ் விஜய் தத்தெடுத்து வளர்க்கிறார். அவனுக்கு குத்துச்சண்டை கற்றுக் கொடுத்து பெரியவனாக்குகிறார். அதே ஏரியாவில் மிகப்பெரிய தாதாவான ராஜேஸ், பந்தயம் கட்டுவதில் வல்லவர். இவர் பந்தயம் கட்டி, அதன்மூலம் காசு சம்பாதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒருநாள் அந்த ஏரியாவில் ஒரு குத்துச்சண்டை போட்டி நடக்கிறது.

அந்த போட்டியில் தன்னுடைய ஆள் ஜெயித்துவிட்டால் தனக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கும் என்பதால், ஜார்ஜ் விஜய்யிடம் குத்துச்சண்டையில் அனுபவமில்லாத ஆளை அனுப்பச் சொல்கிறார். அதற்கு கைமாறாக தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டாம் என்றும் சொல்கிறார்.உடனே, ஜார்ஜ் விஜய், தன்னிடம் நன்கு பயிற்சி பெற்ற பாலாஜியை அனுப்பினால், அவன் ஜெயித்துவிடுவான் என்பதால், குத்துச்சண்டையில் குறைந்த அனுபவம் பெற்ற நாயகன் மனோஜை அனுப்பி வைக்கிறார். அந்த குத்துச் சண்டை போட்டியில் நாயகன் வெற்றி பெற்று திரும்புகிறான். இதனால், ராஜேஸ், ஜார்ஜ் விஜய் மீது கோபம் கொள்கிறார். தான் இழந்த தொகையை சரிக்கட்ட, மற்றொரு போட்டிக்கும் பந்தயம் கட்டுகிறார் ராஜேஸ். அந்த பந்தயத்தில் தன்னுடைய ஆள் தோற்றுவிட்டால், இனி பந்தயம் கட்டமாட்டேன் என்றும், ஜார்ஜ் விஜய்யின் ஆள் தோற்றுவிட்டால் இனி குத்துச்சண்டை சம்பந்தமாக எதிலும் ஈடுபடக்கூடாது என்றும் கூறுகிறார்.அந்த பந்தயத்தை ஏற்று ஜார்ஜ் விஜய், தன்னுடைய டீமில் நன்கு அனுபவம் பெற்ற பாலாஜியை தயார் செய்கிறார். ஆனால் பாலாஜியோ ராஜேஸின் பணத்திற்கு மயங்கி, அவரிடமிருந்து விலகுகிறார். இதனால், நாயகனை அந்த போட்டியில் களமிறக்க ஜார்ஜ் விஜய் முடிவெடுக்கிறார். இறுதியில், நாயகன் அந்த போட்டியில் வென்று தனது வாத்தியாரிடம் நல்ல பெயர் வாங்கினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

வடசென்னையை சுற்றி நடக்கும் விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் மற்றொரு படம். படத்தில் எந்தவொரு காட்சியும் கோர்வையில்லாமல் எடுத்திருப்பதால் படத்தை ரசிக்க முடியவில்லை. சினிமா போல் இல்லாமல் ரொம்பவும் நாடகத்தனமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயகுமார். குத்துச்சண்டை காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படியாக இல்லை.நாயகன் மனோஜ், குத்துச்சண்டை காட்சியில் இன்னும் கொஞ்சம் கூடுதல் சிரத்தை எடுத்து நடித்திருக்கலாம். குத்துச்சண்டை வீரருக்குண்டான வேகம் இவரிடம் இல்லை. நாயகி வீணா நாயருக்கு படத்தில் கனமான கதாபாத்திரம். தனது குடும்பத்தை சீரழித்த வில்லனை பழிவாங்க துடிக்கும் கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார். நாயகனுடன் மோதும் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சியிலும் பளிச்சிடுகிறார்.வில்லத்தனத்தில் ராஜேஸ் மிரட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவில் வில்லனாக வலம்வர நல்ல வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம். பயிற்சியாளராக வரும் ஜார்ஜ் விஜய்யை இதுவரை காமெடியனாக பார்த்து, இதில் கோச்சாக ரசிக்க முடியவில்லை. இருந்தாலும், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.சார்லஸ் மெல்வின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசை பரவாயில்லை. சரவணன் பிள்ளை ஒளிப்பதிவில் வடசென்னையை அழகாக படமாக்கியிருந்தாலும், தேவராஜின் எடிட்டிங் அதை சரியாக கட் செய்யவில்லை என்பது வருத்தமான ஒன்று.

மொத்தத்தில் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’ விளையாட்டு………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி