செய்திகள்,திரையுலகம் பகடை பகடை (2014) திரை விமர்சனம்…

பகடை பகடை (2014) திரை விமர்சனம்…

பகடை பகடை (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் திலீப் குமாருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே செட்டிலாகிவேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை. இதற்காக எந்த வேலைக்கும் போகாமல் பெண் தேடும் படலம் நடத்தி வருகிறார். இதற்காக புரோக்கர் மயில்சாமியிடம் நிறைய பணம் கொடுத்து அப்படியொரு பெண்ணை தேடச் சொல்கிறார்.மறுமுனையில், நாயகி திவ்யா சிங் அமெரிக்காவில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய முதலாளியாக மற்றொரு தீலிப் குமார் வருகிறார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள்.

ஒருநாள் ஐ.டி.நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. இதனை சரிக்கட்ட தான் இறந்த பிறகு கிடைக்கும் இன்சூரன்ஸ் பணம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைக்கிறான். ஆனால், அந்த பணம் இறப்பிற்கு பிறகுதான் கைக்கு கிடைக்கும் என்பதால் என்ன செய்வதென்று அவனும் நாயகியும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில், அவனை போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நாயகன் திலீப் குமார் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது. நாயகனை திருமணம் செய்துகொள்வது போல் நடித்து, அவனை கொன்றுவிட்டு, அவனது முகத்தை வைத்து தான் இறந்துவிட்டதாக கூறி இன்சூரன்ஸ் பணத்தை கைப்பற்ற நாயகியும், மற்றொரு திலீப்குமாரும் முடிவு செய்கின்றனர். இதையடுத்து, நாயகி திவ்யா சிங், நாயகனின் போட்டோவை பார்த்து தனக்கு அவனை பிடித்துவிட்டதாகவும், அவனை திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும் கூறுகிறாள். நாயகனும், நாயகியும் நேரில் சந்தித்துக் கொள்ளாமல் இணையதளம் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள்.

ஒருநாள் இந்தியாவுக்கு நாயகி வருகிறாள். இங்கு வந்து நாயகன் திலீப்குமாருடன் இணைந்து சந்தோஷமாக சுற்றி வருகிறாள். மறுபக்கம் இவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.இறுதியில், நாயகன் திவ்யா சிங்கை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆனாரா?, அல்லது அவனை கொன்று திவ்யாவும், மற்றொரு திலீப்குமாரும் இன்சூரன்ஸ் பணத்தை முறைகேடாக பெற்றுக் கொண்டார்களா? என்பதே மீதிக்கதை.நாயகன் திலீப்குமார் ஏற்கெனவே ஒரு படத்தில் நடித்திருந்தாலும், இந்த படத்திலும் ஏதோ புதுமுகம் போலவே தெரிகிறார். நடிப்பில் துளிகூட முன்னேற்றம் இல்லை. இருவேடத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.நாயகி திவ்யா சிங் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகனுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நடிப்பு பலே.

நாயகனின் அப்பாவாக வரும் இளவரசு, அம்மாவாக வரும் கோவை சரளா ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். புரோக்கராக வரும் மயில்சாமி வரும் காட்சிகள் கலகலப்பு. சிங்கமுத்து, சந்தான பாரதி, முத்துக்காளை ஆகியோர் ஒருசில காட்சிகள் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.கலகலப்பான படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கும் இயக்குனர் சசிசங்கர், கோர்வையான காட்சிகளை அமைக்காமல் கதைக்கு சற்று சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறார். மிகப்பெரிய காமெடி பட்டாளங்களை வைத்துக் கொண்டு காமெடி படமாக கொடுக்க முடியாமல் போனது சற்று வருத்தமே. ராம்ஜி, ஜான்பீட்டர் ஆகியோரது இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம். முரளியின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஏற்றத்தை கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பகடை பகடை’ விளையாட்டு………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி