சென்னையில் மோனோ ரெயில்: மத்திய அரசு அனுமதி!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்ற விதத்தில் மின்சார ரெயில், பறக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரெயில், விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக சென்னைக்கு மோனோ ரெயில் வருகிறது.அந்த வகையில் இரண்டு தடங்களில் இந்த மோனோ ரெயில் இயக்கப்பட உள்ளது. முதலில் பூந்தமல்லி- போரூர் -வடபழனி-கத்திப்பாரா இடையே மோனோ ரெயில் இயக்கப்படும். அடுத்து வண்டலூர்-மேடவாக்கம்-வேளச்சேரி-கத்திப்பாரா இடையேயும் மோனோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

முதலில், ரூ.3,267 கோடி மதிப்பில், பூந்தமல்லி-கத்திப்பாரா இடையே மோனோ ரெயில் திட்டத்தை (20.68கி.மீ. தொலைவிலானது) செயல்படுத்துவதற்கு மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை நேற்று கொள்கை அடிப்படையிலான அனுமதியை வழங்கியது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி உதவி எதுவும் வழங்காது. மாநில அரசு, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை-தனியார் கூட்டு பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் மட்டுமே இந்த திட்ட வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, செயல்பாடுகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுகிறபோது மத்திய அரசு விதிக்கிற நிபந்தனைகள் இந்த திட்டத்துக்கும் பொருந்தும். அந்த வகையில், மாநகருக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து சீரமைப்பு திட்டத்தின்கீழ் கட்டண அடிப்படையிலான வழிமுறைகளை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

உரிய கால இடைவெளிகளில் கட்டணங்களை மாற்றியமைப்பதற்கு என ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும்.நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக ஒன்றுபட்ட மாநகர போக்குவரத்து ஆணையம், ஒரு சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படவேண்டும்.மத்திய, மாநில அரசுகள் இணைந்து கண்காணிப்பு வழிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இரு தரப்புக்கும் இடையேயான புரிந்துணர் ஒப்பந்தத்தில் இது தொடர்பாக விரிவாக குறிப்பிடப்பட வேண்டும். இவ்வாறு மத்திய அரசு நிபந்தனைகள் விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: