செய்திகள்,விளையாட்டு 4-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!…

4-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!…

4-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!… post thumbnail image
கொல்கத்தா:-இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கரண் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். இதில் டாஸ் வென்ற இந்திய தற்காலிக கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். ரஹானேவும், ரோகித் ஷர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். குலசேகரா வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரி அடித்த ரஹானே 28 ரன்களில் (24 பந்து, 6 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு (8 ரன்) நிலைக்கவில்லை.

இதன் பின்னர் ரோகித் சர்மாவும், கேப்டன் விராட் கோலியும் கைகோர்த்தனர். தொடக்கத்தில் சற்று மெதுவாக ஆடிய இவர்கள் போக போக வேகம் கூட்டினர். குறிப்பாக ரோகித் சர்மா , பட்டையை கிளப்பினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது. 100 பந்துகளில் தனது 5-வது சதத்தை நிறைவு செய்த ரோகித் சர்மா தொடர்ந்து அமர்க்களப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 261 ரன்களை எட்டிய போது, 2-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு விராட் கோலி (66 ரன், 64 பந்து, 6 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா 11 ரன்களில் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். இதன் பின்னர் விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா ஆட வந்தார். ரோகித் சர்மா சூப்பர் பார்மில் இருந்ததால், அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பது மட்டுமே சரியாக இருக்கும் என்று கருதி அதற்கு ஏற்ப உத்தப்பா ஆடினார். மறுமுனையில் ரோகித் சர்மா , இலங்கை பவுலர்களை வாட்டி வதைத்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 300 ரன்களை தாண்டி, 400 ரன்களை நோக்கி மின்னல் வேகத்தில் பயணித்தது. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 2-வது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய அத்தியாயம் படைத்தார். ஒரு நாள் போட்டியில் ஒரே வீரர் இரண்டு முறை இரட்டை சதத்தை சுவைப்பது இதுவே முதல் முறையாகும்.

அதன் பிறகும் அவரது கதகளி ஓயவில்லை. ரன்மழை பொழிந்து கொண்டே இருந்தார். ஒரு நாள் போட்டியில் அதிக பட்ச ரன்கள் எடுத்தவரான ஷேவாக்கின் (219 ரன்) சாதனையையும் தகர்த்தார். இறுதியில் கடைசி பந்தில் ரோகித் சர்மா 264 ரன்களில் கேட்ச் ஆனார். குலசேகரா (58 ரன், 32 பந்து), எரங்கா (53 ரன், 31 பந்து), மென்டிஸ் (49 ரன், 27 பந்து) ஆகியோரின் பந்து வீச்சில் ரோகித்சர்மா அதிகமான ரன்களை எடுத்தது கவனித்தக்க ஒன்றாகும்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் குவித்தது. உத்தப்பா 16 ரன்களுடன் (16 பந்து) களத்தில் நின்றார். கடைசி 15 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 184 ரன்களை சேகரித்தது. அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியால், ரோகித் சர்மா எடுத்த ரன்களை கூட எடுக்க முடியவில்லை. கேப்டன் மேத்யூஸ் அதிகபட்சமாக 75 ரன்கள் (68 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். முடிவில் இலங்கை அணி 43.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.தோல்வி பக்கமே நெருங்காத இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி