செய்திகள் மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்ட 2500 எலிகள்!…

மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்ட 2500 எலிகள்!…

மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்ட 2500 எலிகள்!… post thumbnail image
இந்தூர்:-மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளுள் ஒன்றான மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான எலிகள் உள்ளன. மருத்துவமனை வளாகத்தில் எலிகள் எண்ணிக்கையால் சுகாதார கேடு ஏற்பட்டதையடுத்து, எலிகளை முற்றிலுமாக ஒழிக்க பூச்சி கட்டுபாட்டு நிறுவனத்திடம் ரூ.55 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்து சுமார் 2,500 எலிகள் அகற்றப்பட்டதாகவும், தற்போது மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் எலிகள் பிடிக்கும் பணி நடைபெறுவதால் அந்த தளம் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி தொடர்பாக தெரிவித்த அதிகாரிகள், இந்த மருத்துவமனை வளாகத்தில் சுமார் 10,000 எலி வளைகள் உள்ளன. ஒவ்வொரு வளையிலும் 4 முதல் 14 எலிகள் வரை இருக்க வாய்ப்புள்ளது. அதன்படி, இந்த அரசு மருத்துவமனையில் 70,000 எலிகள் வரை இருக்கக்கூடும் எனக் கூறினர். இறால், சமோசா, விஷம் கலந்த நெய் போன்றவற்றை வைத்து எலிகளை பிடித்துவருவதாகவும், எலிகளை பிடித்தவுடன் வளைகளை அடைத்துவிடுவதாகவும் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து பூச்சி கட்டுபாட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி சஞ்சய்.ஜி.கர்மாகர் தெரிவிக்கையில், 20 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் அரசிடமிருந்து இந்த பணிக்காக ரூ.6 லட்சம் பெற்றோம். தற்போது இதற்கு ரூ. 78 லட்சம் வரை ஆகிறது. எலிப் பொறிகளில் வைக்கப்படும் உணவு பொருட்களை வாங்கவே சுமார் ரூ.1.8 லட்சம் செலவு செய்கிறோம். ஒரு மாத காலத்திற்கு இந்த பணியில் ஈடுபட 40 பணியாளர்களை நியமித்துள்ளோம். 10 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறும் இந்த பணிக்காக விலையுயர்ந்த கருவிகள் மற்றும் விஷப்பொருட்களை பயன்படுத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார். இந்த எலி பிடிக்கும் பணி டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி முடியுமென எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி