செய்திகள்,விளையாட்டு முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…

முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…

முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!… post thumbnail image
கட்டாக்:-இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நேற்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது.டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவைச் சேர்ந்த தவான்- ரகானே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டம் தொடங்கிய முதலே இருவரும் சிறப்பாக விளையாடினர். பவர் பிளேயான முதல் 10 ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது. 20.4 ஓவரில் இந்திய அணி 100 ரன்னை கடந்தது. அத்துடன் இருவரும் அரைசதம் அடித்தனர். 23 ஓவரில் இந்தியா 124 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்காததால் இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங் பவர் பிளேயை தேர்வு செய்தார். சிறப்பாக விளையாடிய இருவருக்கும் இது அடித்து விளையாட வசதியாக அமைந்தது.

இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய தவான் 113 ரன்னிலும், ரகானே 111 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த ரெய்னா- கோலி ஜோடி அதிரடியாக விளையாடியது.ரெய்னாவுக்கு நேற்றைய போட்டி 200-வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். இதில் அவர் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 52 ரன்னிலும், கோலி 22 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த அம்பதி ராயுடு 20 பந்தில் 27 ரன்னும், அக்சார் பட்டேல் 4 பந்தில் 14 ரன்னும் எடுத்தனர்.இதனால் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது.பின்னர் 364 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணியின் தில்சான், தரங்கா ஆகியோர் களம் இறங்கினார்கள். தில்சான் 18 ரன்னில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து சங்ககாரா களம் இறங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து ஜெயவர்த்தனே களம் இறங்கினார். இவர் பொறுப்புடன் ஆடினார். ஆனால் மறுமுனையில் விளையாடிய தரங்கா 28 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஜெயவர்த்தனே 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனால் இலங்கை அணி 39.1 ஓவரில் 194 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 169 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி