அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!… post thumbnail image
புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமான அளவில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும், அவற்றை மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மத்திய அரசு, கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் 8 பேர் பெயர் பட்டியலை மத்திய அரசு தாக்கல் செய்தது.

இதனை மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தாக்கல் செய்தார். பிறகு வாதாடுகையில், வெளி நாடுகளில் இந்தியர்கள் தொடங்கியுள்ள வங்கி கணக்குகள் அனைத்தும் சட்ட விரோதமானவை அல்ல, அவற்றை வெளியிட்டால் அந்த நாடுகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்வதற்கு பிரச்சினை ஏற்படுத்தும். எனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது 500 பேர் பெயர்களை ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளிடம் இருந்து மத்திய அரசு பெற்றுள்ளது. அதை ரகசியமாக வைத்துக் கொள்வதாக வெளிநாடுகளிடம் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மீறி வெளியிட்டால் பிரச்சினை ஏற்படுத்தும். வெளிநாடுகளில் உள்ள கணக்குகள் சட்டத்துக்கு உட்பட்டதா? சட்டத்துக்கு புறம்பாக தொடங்கப்பட்டதா?…. என விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்த பிறகே பெயர்களை அரசு வெளியிடும் என்றார். இதை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் நலன் மீது நீங்கள் அக்கறை காட்ட வேண்டாம். கறுப்பு பணத்தை மீட்டு வரும் பொறுப்பை மத்திய அரசிடம் விட முடியாது. அதை சிறப்பு புலனாய்வு குழு கவனித்துக் கொள்ளும். எனவே அனைவரது பெயரையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவரது பட்டியலையும் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி இன்று காலை 10.30 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.அதில் 627 பேர் பெயர் பட்டியல் இடம் பெற்று இருந்தது. 3 ஆவணங்களாக பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. முதலாவது ஆவணத்தில் 627 பேர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. 2–வது ஆவணத்தில் வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களும், 3–வது ஆவணத்தில் விசாரணை நிலவரங்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது.பட்டியலை தாக்கல் செய்த பின்பு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வாதாடுகையில், நீதிபதிகளிடம் ஒரே ஒரு கோரிக்கை வைத்தார். அவர் கூறியதாவது:–
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அனைத்து விவரங்களுடன் 627 பேர் பெயர் பட்டியலை தாக்கல் செய்துள்ளோம். இதில் 327 பேர் மீதான கணக்கு பற்றி விசாரணை முடிந்து விட்டது. இன்னும் 300 பேர் கணக்கு பற்றி விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதற்கு அடுத்த ஆண்டுமார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.
மற்ற நாடுகளிடம் இருந்து முழு தகவல்களையும் பெறும் வரை கோர்ட்டு இதில் எந்த உத்தரவும் வழங்க கூடாது. இது தொடர்பான விசாரணையில் மத்திய அரசு தலையிடாது.

வெளிநாட்டில் கணக்கு வைத்திருப்பவர்களில் 400 பேர் இந்தியர்கள். மற்றவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள். அவர்களது கணக்கு எப்படிப்பட்டது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–கறுப்பு பணம் பதுக்கியோர் பட்டியலை இப்போது வெளியிட முடியாது. சீல் வைக்கப்பட்ட இந்த பட்டியல் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும். சீல் வைக்கப்பட்ட அந்த பட்டியலை சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் மட்டுமே திறக்க வேண்டும்.சிறப்பு புலனாய்வுக்குழு தனது விசாரணை நிலவரம் தொடர்பான அறிக்கையை வருகிற நவம்பர் மாத இறுதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இதில் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்யும்.வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதற்கிடையே சுவிஸ் நாட்டின் ஜெனீவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை தர தயாராக இருப்பதாக பிரான்ஸ் நாடு தெரிவித்துள்ளது.எனவே மேலும் கறுப்பு பணம் பதுக்கியோர் பட்டியல் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி