அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் ஜெயலலிதா ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை!…

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை!…

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை!… post thumbnail image
புதுடெல்லி:-பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர தனிக்கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் தண்டனையை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும் தங்கள் சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் தனித்தனியாக 4 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவர்களுடைய ஜாமீன் மனுக்களை நீதிபதி சந்திரசேகர் கடந்த 7ம் தேதி நிராகரித்தார்.

குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்று அரசு தரப்பில் விரும்பினாலும் ஊழலின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனுவையும், ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.
கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதால் ஜெயலலிதா சார்பில் 9ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மறுநாள் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் சார்பில் இதேபோல் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-66 வயதான நான் பல்வேறு நோய்களால் உடல் நலிவுற்று இருக்கிறேன். எனவே எனது வயதையும், உடல் நிலையையும் கருத்தில் கொண்டு உடனடி நிவாரணம் பெறும் விதமாக என்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்.மேலும் நான் 4 ஆண்டுகள்தான் சிறை தண்டனை பெற்றுள்ளேன். நான் மூத்த பிரஜையாகவும் பெண்ணாகவும் இருப்பதால் எனக்கு ஜாமீன் அளித்திட வேண்டும். நான் சட்டத்தை மதித்து நடக்கும் பிரஜை. எனவே கோர்ட்டின் நீதிக்கு முன்பாக நான் தலைமறைவாகிவிட வாய்ப்பில்லை.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் சார்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன் கடந்த திங்கட்கிழமை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி, ஜெயலலிதாவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.இதேபோல் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி சார்பில் மூத்த வக்கீல் சுஷில் குமார் ஆஜராகி, அவர்களுடைய ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணைக்கான வேண்டுகோளை முன்வைத்தார்.
இந்த வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று விசாரணைக்கு தேதி குறித்து உத்தரவு பிறப்பித்தனர்.அதன்படி, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெறுகிறது.இதற்கிடையே, பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சொத்து குவிப்பு வழக்கில் தான் அடிப்படை புகார்தாரராக இருந்ததால், அவர்களுடைய ஜாமீன் மனு மீதான விசாரணையில் தன்னுடைய தரப்பு வாதங்களையும் கோர்ட்டில் முன்வைக்க அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி