செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை விற்க அனுமதி வழங்க கோரிக்கை!…

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை விற்க அனுமதி வழங்க கோரிக்கை!…

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை விற்க அனுமதி வழங்க கோரிக்கை!… post thumbnail image
ஹெல்சிங்கி:-சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை இயங்கி வந்தது. உலகில் உள்ள நோக்கியா தொழிற்சாலைகளில் இதுதான் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலையில் சுமார் 1,100 பேர் பணிபுரிந்து வந்தனர். அதுதவிர ஒப்பந்த தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் இதன்மூலம் வேலைவாய்ப்பு பெற்றுவந்தனர். இந்த ஆலையில் தயாரிக்கும் கருவிகள் பெரும்பாலும் உள்நாட்டு சந்தையில் விற்கப்பட்டது.

ஆனால் ஏற்றுமதி செய்ததாக கூறி மென்பொருள் ஏற்றுமதிக்கான சலுகையை பெற்றுவந்ததன் மூலம் நோக்கியா நிறுவனம் ரூ.2,400 கோடி தரவேண்டும் என்று தமிழக அரசு நோட்டீசு அனுப்பியது. இதனை நோக்கியா நிறுவனம் மறுத்து வழக்கு தொடுத்தது.வரி தொடர்பான மற்றொரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, நோக்கியா நிறுவனம் அந்த ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு முன் ரூ.3,500 கோடிக்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி முதல் அந்த ஆலையை மூடப்போவதாக நோக்கியா நிறுவனம் அறிவித்தது. நோக்கியாவின் உயர் அதிகாரிகள் இதுவரை இந்த விவகாரம் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தனர். இப்போது முதல்முறையாக நோக்கியா நிறுவன நிர்வாக துணைத் தலைவர் பாரி பிரெஞ்ச் இதுபற்றி கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:–

இந்திய சந்தையில் 60 சதவீத செல்போன்கள் இறக்குமதி செய்யப்பட்ட நேரத்தில், உலகத்தரத்தில், குறைந்த விலையில் செல்போன்கள் கிடைக்கும் வகையில் சென்னையில் (ஸ்ரீபெரும்புதூர்) நோக்கியா தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த ஆலை மூடப்பட உள்ளது. வரித்துறையால் முடக்கப்பட்டதால் அதனை நாங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு மாற்ற முடியவில்லை. சென்னை நோக்கியா ஆலையை விற்க முன் அனுமதி வழங்க வேண்டும். அப்படி அனுமதி வழங்கப்பட்டால், வரி பிரச்சினை தீரும் வரை ஆலையை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஒரு பொது கணக்கில் வைத்து இருப்போம். குறிப்பாக இதில் என்ன சிக்கல் என்றால், அந்த ஆலையின் மதிப்பு தினமும் சிறிது, சிறிதாக தேய்ந்து வருகிறது. விற்கும் பணத்தை பொதுக்கணக்கில் வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும் வகையில் அதனை வாங்கும் ஒருவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் கவலையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி