அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!… post thumbnail image
புதுடெல்லி:-தென்கொரியாவின் இன்சியோன் நகரில் அண்மையில் நடந்து முடிந்த 17-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 11 தங்கம் உள்பட 57 பதக்கங்களை கைப்பற்றி 8-வது இடத்தை பிடித்தது. பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டினார். அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. பின்னர் வீரர்கள் மத்தியில் உற்சாகம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசினார்.

வீரர்களின் ஊக்கமும், ஆர்வமும் நாட்டிற்கு மேலும் பல வெற்றிகளை கொண்டு வரும் என்று நம்புவதாக தெரிவித்த மோடி, எப்படி மங்கள்யான் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைத்ததோ அதே போன்று விளையாட்டு வீரர்களின் சாதனைகளும் மதிப்புக்குரியவை, அனைத்து இந்தியர்களையும் பெருமைப்பட வைப்பவை என்று புகழ்ந்தார்.நிகழ்ச்சியில் குழுமியிருந்த சாதனை நாயகர்களுக்கு அவர் வேண்டுகோளும் வைத்தார். உங்கள் யோசனைகளை நீங்கள் என்னிடம் எந்த தயக்கமும் இன்றி தெரிவிக்கலாம். குறிப்பிட்ட விஷயம் குறித்து என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று விரும்பினால், அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். என்னை உங்களது நண்பர் போன்று பாவித்துக் கொள்ளுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரைத் தொடர்ந்து, ஆசிய விளையாட்டு பெண்கள் குத்துச்சண்டையில் தங்கம் வென்று அசத்திய மேரிகோம் இணைந்திருப்பதை மோடி சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டிற்கு அரசியல்தலைவர்களை போன்று விளையாட்டு வீரர்களாலும் நிறைய சேவையாற்ற முடியும் என்று நம்பிக்கையூட்டினார்.கார்ப்பரேட் நிறுவனங்களும் இப்போது விளையாட்டு வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை அளிப்பது நல்ல அறிகுறியாகும். இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பதக்கம் வென்ற சாதனையாளர்கள் பல்கலைக்கழகங்களில் பேச வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.ஒரு விளையாட்டு வீரர் தவறு செய்தாலும் அது நாட்டிற்கே கெட்டப்பெயரை ஏற்படுத்தி விடும். எனவே தங்களது நடத்தையில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். விளையாட்டுத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவலும் விழாவில் பங்கேற்றார்.
நிகழ்ச்சி முடிந்ததும் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவர்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சியான அனுபவம். அவர்கள் தான் இந்தியாவை உண்மையிலேயே பெருமைப்படுத்தியவர்கள் என்று எழுதியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி