செய்திகள்,திரையுலகம் மெட்ராஸ் (2014) திரை விமர்சனம்…

மெட்ராஸ் (2014) திரை விமர்சனம்…

மெட்ராஸ் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
வடசென்னை பகுதியில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டில் வசித்து வருகிறார் கார்த்தி. இவரும் கலையரசனும் உயிர் நண்பர்கள். கார்த்தி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். அதே ஏரியாவில் வசிக்கும் நாயகி கேத்ரீன் தெரேசாவும் கார்த்தியும் காதலிக்கிறார்கள்.இவர்கள் வாழும் ஏரியாவில் உள்ள சுவர் மீது இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் போட்டி போட்டு விளம்பரம் செய்வது வழக்கம். இதனால் இரு கட்சிகளுக்கு இடையே பல பிரச்சனைகள், அடிதடி ஏற்படுகிறது. இதில் பலர் பலியாகின்றனர். இந்த பிரச்சினைகள் காரணமாக கலையரசனின் தந்தை இறந்து விடுகிறார்.

பிறகு அந்த சுவரில் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த கண்ணன், அவரது தந்தை படத்தைப் போட்டு விளம்பரம் செய்கிறார். பக்கத்து ஏரியாவில் இருந்து தங்கள் ஏரியா சுவரை சொந்தம் கொண்டாடும் கண்ணனின் கொட்டத்தை அடக்கத் துடிக்கும் அரசியல்வாதி மாரியின் உதவியுடன் அந்த சுவரைக் கைப்பற்றப் பார்க்கிறான் அன்பு.இதனால் இரு கும்பலுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் கண்ணனின் மகன் கொலை செய்யப்படுகிறார். இதற்கு பழிக்குப் பழி வாங்கும் விதமாக அன்புவை கார்த்தியின் கண் முன்னே எதிர் கும்பல் கொலை செய்து விடுகின்றனர். தன் உயிர் நண்பனை பறி கொடுத்த கார்த்தி அதற்கு காரணமாக இருந்தவர்களை பழி வாங்க நினைக்கிறார். ஆனால் காதலி கேத்ரீன் தெரேசா கார்த்தியை தடுக்கிறார்.இறுதியில் கார்த்தி நண்பனை கொலை செய்தவர்களை பலிவாங்கினாரா? கலையரசனின் லட்சியமான அந்த சுவரை கைப்பற்றினார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் கார்த்தி, காளி என்னும் கதாபாத்திரத்திற்கு அற்புதமாக பொருந்தியிருக்கிறார். வடசென்னை பையனாகவே மாறி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டிருக்கிறார் கார்த்தி. குறிப்பாக இவரது உடல் அசைவும், பேசும் வசனங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார் கார்த்தி. காதல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் கார்த்தியின் நடிப்பு அருமை.முதல் படத்திலேயே அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கேத்ரீன் தெரேசா. இவருடைய முகபாவனைகள் ரசிக்கும் படியாக இருக்கிறது. கலை என்னும் கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்கிறார். கார்த்தி நண்பனாக வரும் கலையரசன், அவரின் மனைவியாக வரும் ரித்விகா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கின்றன. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். முரளி தனது ஒளிப்பதிவில் வடசென்னையை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார். படத்தின் வசனங்கள், எடிட்டிங் மற்றும் பாட்டிற்கு நடன அமைப்புகள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.அட்டக்கத்தி படத்தை ஜாலியான கதையாக இயக்கிய ரஞ்சித், மெட்ராஸ் படத்தை சீரியசான கதையில் காதல் கலந்து உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார். வட சென்னையில் உள்ள ஒரு சுவரை மையமாக வைத்து கதைக்கருவை உருவாக்கி, அதற்கு ஏற்றாற்போல் திரைக்கதையையும் அமைத்து ரசிகர்களின் ரசனைக்கேற்ப மெட்ராசை உருவாக்கிய ரஞ்சித்தை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘மெட்ராஸ்’ அதிரடி………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி