செய்திகள்,திரையுலகம் பொறியாளன் (2014) திரை விமர்சனம்…

பொறியாளன் (2014) திரை விமர்சனம்…

பொறியாளன் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஹரிஷ் கல்யாண் இன்ஜீனியரிங் படித்துவிட்டு ‘ஆடுகளம்’ நரேன் நடத்தி வரும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய நண்பர் அஜய்ராஜ். வட்டிக்கு பணம் கொடுக்கும் அக்சுதா குமாரிடம் அடியாளாக பணியாற்றி வருகிறார். இவருடைய சித்தி பெண்தான் நாயகி ஆனந்தி. ஹரிஷ் கல்யாண் அடிக்கடி அஜய்ராஜின் வீட்டிக்கு போய்வரும் நிலையில், நாயகி இவன் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறாள். இவனும் அவளை காதலிக்க ஆரம்பிக்கிறான்.இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் வேலை பார்க்கும் கட்டுமான நிறுவனத்தில் பிரச்சினை வர அந்த வேலையை விட்டு விலகுகிறார். புதிய கட்டுமான நிறுவனம் தொடங்குவது என்ற லட்சியத்துடன் இருந்து வந்த ஹரிஷ் கல்யாண் இனிமேல் வேலைக்கு செல்லக்கூடாது புதிய கட்டுமான நிறுவனம் தொடங்குவது என முடிவு செய்கிறார். இதற்காக அவரது அப்பாவிடம் பணம் கேட்கிறார். அவரும், பணம் கொடுக்கிறார்.

இருக்கிற பணத்தை வைத்துக்கொண்டு சிட்டிக்கு வெளியில் மோகன்ராம் என்ற புரோக்கர் மூலமாக இடம் பார்க்கிறார். ஆனால், மோகன்ராமோ சிட்டிக்கு வெளியில் இடம் பார்த்து, கட்டிடம் கட்டினால் சீக்கிரம் விலைக்கு போகாது. சிட்டிக்குள்ளேயே இடம் பார்த்தால் சீக்கிரமாக விற்றுவிடலாம் என்று ஆலோசனை கூறுகிறார். அவனிடம் அப்படி ஒரு இடம் இருப்பதாகவும் கூறுகிறான்.உடனே, சிட்டிக்கு மத்தியில் இருக்கும் இடத்தை ஹரிஷுக்கு காட்டுகிறான் மோகன்ராம். ஆனால், அதன் விலை ரூ.2 கோடி வரை சொல்கிறான். அவ்வளவு பணம் கையில் இல்லாததால் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறான் ஹரிஷ். அந்த வேளையில் ஹரிஷின் நண்பனான அஜய்ராஜ் வேலை செய்யும் அக்சுதா போலீசில் சிக்கி ஜெயிலுக்கு சென்றுவிடுகிறார். இதனால், அஜய்ராஜ் தன் கைவசம் இருக்கும் ரூ.2 கோடி பணத்தை ஹரிஷுக்கு கொடுத்து உதவுகிறார்.

அந்த பணத்தை பெற்றுக்கொண்ட ஹரீஷ், சிட்டிக்கு மத்தியிலான நிலத்தை வாங்கி கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும்போது பிரச்சினை வருகிறது. அந்த நிலத்துக்கு சொந்தக்காரன் என்று சொல்லி ஒருவன் பிரச்சினை பண்ணுகிறான். அதன்பிறகுதான் ஹரிஷுக்கு மோகன்ராம் தன்னை ஏமாற்றியது தெரியவருகிறது. தன்னை ஏமாற்றிய மோகன்ராமை தேடி அலைகிறார் ஹரிஷ். இதற்கிடையில் அஜய்ராஜின் முதலாளியான அக்சுதா குமார் ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார். அஜய்ராஜிடம் தனக்கு வரவேண்டிய பணத்தை கேட்டு தொந்தரவு செய்கிறார்.இறுதியில், தன்னை ஏமாற்றிய மோகன்ராமை ஹரிஷ் கண்டுபிடித்து அவனிடமிருந்து பணத்தை மீட்டாரா?, தனது லட்சியத்தை அடைந்தாரா? என்பதே மீதிக்கதை.படத்தில் ஹரிஷ் கல்யாண், சரவணன் கதாபாத்தில் சிறப்பாக பொருந்தி நடித்திருக்கிறார். இதற்குமுன் நடித்த படங்களை விட இந்தப் படத்தில் நடிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார். நடனம், காதல் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் ஆனந்தி அழகாக இருக்கிறார். தமிழில் அறிமுக படம் என்றாலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹரிஷ் கல்யாணின் நண்பனாக வருபவர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு புதிதாக வீடு வாங்குபவர்களை ரியல் எஸ்டேட்காரர்கள் ஏமாற்றும் அவலம் இன்றும் தமிழ்நாட்டில் இருந்துகொண்டுதான் வருகிறது. அதை இந்த படத்தின் மூலம் தெளிவாக காட்டி, அதை தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சமூகத்திற்கு ஒரு பாடமாக கொடுத்திருக்கும் இயக்குனர் மணிமாறனுக்கு பாராட்டுக்கள். ரியல் எஸ்டேட் தொழில் எந்த மாதிரியெல்லாம் தப்பு நடக்கிறது என்பதை சமூகத்திற்கு சவுக்கடியாக சொல்லியிருக்கிறார். புதியதாக இடம் வாங்குறவங்களுக்கு இந்த படம் ஒரு பாடமா இருக்கும். இன்றைய நிலையில் இந்த படம் வெளிவந்திருப்பது அனைவருக்கும் உதவியாக இருக்கும்.வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ஜோன்ஸ் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலும், கானா பாலா பாடிய பாடலும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘பொறியாளன்’ வெற்றியாளன்……………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி