செய்திகள்,திரையுலகம் காதலை தவிர வேறொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…

காதலை தவிர வேறொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…

காதலை தவிர வேறொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் அன்புவின் அக்கா ஒருவரை காதலித்து ஊரைவிட்டு ஓடியதால், அவமானம் தாங்கமுடியாத அவரது குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது. இதனால் சிறுவயதிலேயே காதல் என்றால் பிடிக்காமல் வளர்ந்து வருகிறார் அன்பு. வளர்ந்து பெரியவனானதும் பத்திரிகை ஒன்றில் வேலை பார்க்கும் அன்பு, காதலர் தினத்தன்று கடற்கரையில் நெருக்கமாக அமர்ந்துகொண்டிருக்கும் காதல் ஜோடிகளை படம்பிடித்து பத்திரிகையில் வெளியிடுகிறார்.இதனை பார்த்த காதல் ஜோடிகள் தங்கள் புகைப்படம் பத்திரிகையில் வெளிவர காரணமாக இருந்த அன்புமீது வெறுப்பு கொள்கின்றனர். இதனால் இவர் தங்கியிருக்கும் வீட்டிலும் பிரச்சினை வருவதால் அன்புவை வீட்டை விட்டு காலி செய்கிறார் வீட்டின் உரிமையாளர்.

பின் தனது மாமாவான லாரன்ஸ் மாஸ்டர் வீட்டில் போய் தங்குகிறார். டியூசன் மாஸ்டரான இவரது வீட்டுக்கு அருகிலேயே நாயகி கமலி வசித்து வருகிறார். தனது மாமாவிடம் டியூசன் படிக்க வருபவர்களும் காதல் செய்து வருகிறார்கள். இதுபிடிக்காமல் அவர்கள் மீது வெறுப்பு காட்டி வருகிறார் அன்பு.அன்புவால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருத்தியின் தோழியும் இதே டியூசனில் படித்து வருகிறாள். அவள் தனது தோழிக்கு ஏற்பட்ட அவமானத்தை ஈடுகட்டும் விதமாக அன்புவை பழிவாங்க நினைக்கிறாள். இதனால் அன்புவின் செல்போனை எடுத்து, தன்னுடைய செல்போனுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பிக் கொள்கிறாள். பின்னர், அவளே போலீசுக்கு போன் செய்து புகாரும் செய்துவிடுகிறாள்.உடனே, போலீசார் அன்பு வீட்டுக்கு வந்து விசாரணை செய்கிறார்கள். அப்போது, அன்பு மொபைலில் இருந்து இவளுக்கு செய்தி அனுப்பப்பட்டது தெரிய வருகிறது. உடனே, போலீசார் அன்புவை கைது செய்ய முயற்சிக்கும் வேளையில், அவளாகவே தான்தான் அந்த செய்தியை அன்புவின் செல்போனில் இருந்து அனுப்பினேன் என்று ஒத்துக் கொள்கிறாள்.உடனே, அன்பு அவளிடம் தான் காதலை வெறுப்பதற்கான காரணத்தை விளக்குகிறான். காதலால் தனது குடும்பமே சீரழிந்துபோனதை அவளிடம் விளக்கிக் கூறுவதை கேட்டுக் கொண்டிருக்கும் நாயகி கமலி அப்போதிலிருந்து அவனை காதலிக்க தொடங்குகிறாள்.இறுதியில், காதலையே வெறுக்கும் அன்பு, கமலியை காதலித்தானா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தின் நாயகன் அன்புவாக வரும் யுவனை ‘சாட்டை’ படத்தில் ரசிக்க முடிந்த அளவுக்கு இந்த படத்தில் ரசிக்க முடியவில்லை. அவருடைய நடிப்பும் மெச்சும்படியாக இல்லை. சரண்யா மோகனை குணச்சித்திர கதாபாத்திரத்தில் மட்டுமே வைத்து பார்க்க முடிகிறது. கதாநாயகியாக நினைத்துப் பார்க்க முடியவில்லை.இமான் அண்ணாச்சி படம் முழுக்க பேசிக்கொண்டே வருவதால் சலிப்பையே ஏற்படுத்துகிறது. காமெடி என்ற பெயரில் இவர் செய்யும் சேட்டைகள் வெறுப்பையே வரவழைக்கின்றன. படத்தில் தலைமையாசிரியராக வரும் இயக்குர் செல்வபாரதியின் நடிப்பு சொல்லும்படியாக இல்லை.படம் முழுக்க சிறுவர்களை வைத்தை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் கே.செல்வபாரதி. ஆனால், அவற்றையெல்லாம் ரசிக்கும்படி செய்யத் தவறியிருக்கிறார். படத்தில் போலீசிடம் மாணவன் ஒருவன் வாக்குமூலம் கொடுக்கும் காட்சி மட்டும்தான் ரசிக்கும்படி இருக்கிறது. 5 நிமிடம் ஓடும் இந்த காட்சி சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்வதாக அமைத்திருப்பது இயக்குனரின் சிறப்பு. மற்றபடி, படத்தில் எந்தவொரு காட்சியும் ரசிக்கும்படியாகவும், பார்க்கும்படியாகவும் இல்லை.ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பூபதியின் ஒளிப்பதிவு கண்ணுக்கு எரிச்சலை தருகிறது. சில இடங்களில் மிகவும் மலிவான கேமராவை வைத்து படமாக்கியதுபோல் தெரிவது படத்திற்கு தொய்வே.

மொத்தத்தில் ‘காதலை தவிர வேறொன்றுமில்லை’ ஒன்னுமேயில்லை………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி