சர்ச்சைக்குரிய பக்கெட் லிஸ்ட் போட்டி தலைப்பை மாற்றிய மலேசிய ஏர்லைன்ஸ்!…

விளம்பரங்கள்

கோலாலம்பூர்:-மலேசியன் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு மார்ச் 8ம்தேதியும், ஜூலை 17ம்தேதியும் நிறுவனம் இரண்டு விபத்துகளை சந்திக்க நேர்ந்தது. 537 பயணிகளின் உயிர்களைப் பலி வாங்கிய இந்த விபத்துகளைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் டிக்கெட் விற்பனைகள் பெரும் சரிவை சந்தித்தன. இந்நிலையை மாற்ற வேண்டி சில பயணங்களின் கட்டணத் தொகையைப் பெரிதும் குறைத்துள்ள இந்த நிறுவனம் சில சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தங்களின் நிறுவன விற்பனையைப் புதுப்பிப்பதற்காக அங்குள்ள முகவர்களுக்கான கமிஷனை இரண்டு மடங்காக மலேசியன் விமான நிறுவனம் உயர்த்தியுள்ளது என்று ஆஸ்திரேலிய ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதுபோல் இணையதளத்தில் அந்த நாட்டுப் பயணிகளுக்கான சலுகைப் போட்டி ஒன்றையும் இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. ‘மை அல்டிமேட் பக்கெட் லிஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போட்டியில் பயணிகள் செல்ல விரும்பும் இடங்களையும், அதற்கான காரணங்களையும் விமான நிறுவனம் கேட்டிருந்தது. இதில் வெற்றி பெறும் 16 பயணிகளுக்கு ஐபேட் அல்லது மலேசியாவிற்குத் திரும்பும் விமான டிக்கெட் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

பொதுவாக பக்கெட் லிஸ்ட் என்ற தொடர் ஒருவர் இறப்பதற்குமுன் பார்க்க அல்லது செய்யவிரும்பும் செயல்களைக் குறிப்பதாகும். ஏற்கனவே இரண்டு விபத்துகளில் உயிர்ப்பலியைப் பெற்றுள்ள இந்நிறுவனம் தற்போது போட்டியிலும் இத்தகைய தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது குறித்து மக்களிடையே பெரும் விமர்சனங்கள் எழுந்தன. இதனைததொடர்ந்து விமான நிறுவனத்தின் இணையதள அறிவிப்பில் இந்த வார்த்தைத் தொடர் இன்று நீக்கப்பட்டு பயணிகள் செய்ய விரும்பும் காரியங்களைக் குறிப்பிடுமாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதுகுறித்து எந்தக் கருத்தும் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரால் வெளியிடப்படவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி