அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் மோடி ஜப்பான் பயணமானார்!…

பிரதமர் மோடி ஜப்பான் பயணமானார்!…

பிரதமர் மோடி ஜப்பான் பயணமானார்!… post thumbnail image
புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறைப்பயணமாக இன்று ஜப்பான் புறப்பட்டு சென்றார்.இந்த பயணம் தொடர்பாக புறப்படுவதற்கு முன்னதாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, எனது நல்ல நண்பரான ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வின் அழைப்பையேற்று இந்தியா-ஜப்பான் இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் ஆவலாக உள்ளேன்.ஆசியாவின் பழமையான இரண்டு ஜனநாயக நாடுகளிடையிலான உறவுகளை எனது பயணம் அடுத்த உயர்வான கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு செல்வதற்கு முன்னதாக கலாச்சார செழுமையும், நவீனத்துவமும் ஒன்றிணைந்து கைகுலுக்கும் ஜப்பானின் ‘கியோட்டோ’ ஸ்மார்ட் சிட்டிக்கு செல்லும் பிரதமர் மோடியை, மரபுகளுக்கு மாறாக கியோட்டோ நகருக்கே வந்து ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே வரவேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் உலகத்தரத்துக்கு ஒப்பான 100 பெருநகரங்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள பிரதமர் மோடி, நாளை ஜப்பானின் ‘ஸ்மார்ட் சிட்டி’ என்றழைக்கப்படும் கியோட்டோ நகரை சுற்றிப்பார்த்து, அதே வகையில் இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட் சிட்டிகளை வடிவமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

பின்னர், தலைநகர் டோக்கியோவில் வரும் திங்கட்கிழமையன்று நடைபெறும் உச்சி மாநாட்டின்போது, பாரம்பரிய தேநீர் விருந்தினை அளித்து பிரதமர் மோடியை ஷின்ஸோ அபே கவுரவிக்கின்றார்.முந்தைய காலத்தில் ஜப்பானியத் தலைவர்களால் ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தத் தேநீர் விருந்து தற்போது சிறப்பு வாய்ந்த முக்கிய விருந்தினர்களுக்கு மட்டும் அளிக்கப்படும் பெரிய கவுரவமாகக் கருதப்படுகின்றது.இந்த தேநீர் விருந்தின்போது அபேயின் விருப்பத் தேர்வான பொடி செய்யப்பட்ட பச்சை தேயிலை பானம் மோடிக்கும் வழங்கப்படும் என்றும், அரசு முறையிலான விருந்து நிகழ்ச்சி ஒன்றும் அவருக்காக ஏற்பாடு செய்யப்படுகின்றது என்றும் ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது.இந்த உச்சி மாநாட்டின்போது, இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு, அணு தொழில்நுட்பம், தொழில்துறை, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாவதுடன் முந்தைய பழைய ஒப்பந்தங்களும் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி