இந்தியா இங்கிலாந்து ஒரு நாள் கிரிக்கெட்: 2 வது போட்டியில் இந்தியா அபார வெற்றி!…

விளம்பரங்கள்

கார்டிப்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்திய அணி இப்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது.இதன்படி ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். அவுட் பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் எச்சரிக்கையுடன் ஆட்டத்தை ஆரம்பித்த இவர்கள் முதல் இரு ஓவர்களை மெய்டனாக்கினார்கள். ஆனாலும் தவான் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

அவர் 11 ரன்னில் (22 பந்து, 2 பவுண்டரி), கிறிஸ் வோக்சின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் ஆனார். அடுத்து துணை கேப்டன் விராட் கோலி ஆட வந்தார். ஆக்ரோஷமாக ஆட முற்பட்ட கோலி அதே ஓவரில் கேட்ச் ஆகி டக்-அவுட் ஆனார். ஒரு நாள் போட்டியில் கோலி டக்-அவுட் ஆவது இது 10-வது முறையாகும். அடுத்தடுத்து விக்கெட் சரிவால் இந்தியா திகைப்புக்குள்ளானது. முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 26 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ரோகித் ஷர்மாவும், ரஹானேவும் அணியை சரிவில் இருந்து நிமித்தியதுடன் ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தினர். ஸ்கோர் 110 ரன்களை எட்டிய போது ரஹானே 41 ரன்களில் (47 பந்து, 4 பவுண்டரி) வெளியேறினார். சிறிது நேரத்தில் டிரெட்வெல்லின் சுழற்பந்து வீச்சில் சில அடி இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயற்சித்த ரோகித் ஷர்மாவும் (52 ரன், 87 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்து நடையை கட்ட, மறுபடியும் இந்திய அணி தடுமாற்றத்திற்குள்ளானது.

இந்த சூழலில் சுரேஷ் ரெய்னாவும், கேப்டன் டோனியும் இணைந்தனர். இதன் பிறகு தான் ஆட்டம் சூடுபிடித்தது. ஏதுவான பந்துகளை இந்த ஜோடி எல்லைக்கோட்டிற்கு விரட்ட தவறவில்லை. இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. தொடக்கத்தில் மிரட்டிய கிறிஸ்வோக்சின் ஓரே ஓரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரியை விளாசிய ரெய்னா, டெஸ்ட் தொடரில் கலங்கடித்த ஆண்டர்சனின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். பேட்டிங் பவர்-பிளேயில் (36-40 ஓவர்) மட்டும் இந்திய வீரர்கள் 62 ரன்களை திரட்டி அமர்க்களப்படுத்தினர்.எக்ஸ்டிரா வகையிலும் இந்திய அணிக்கு நிறைய ரன்கள் கிடைத்தது. குறிப்பாக கிறிஸ் ஜோர்டான் ஒரே ஓவரில் 5 வைடுகளை வீசினார்.அபாரமாக ஆடிய சுரேஷ் ரெய்னா 74 பந்தில் தனது 4-வது சதத்தை நிறைவு செய்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு சதத்தை ருசித்த ரெய்னா அதே ரன்களில் (100 ரன், 75 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார்.

டோனி-ரெய்னா கூட்டணி 5-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் 55-வது அரைசதத்தை பூர்த்தி செய்த டோனி 52 ரன்களில் (51 பந்து, 6 பவுண்டரி) கிளீன் போல்டானார். இதன் பின்னர் இறுதி ஓவரில் அஸ்வின் விரட்டிய 2 பவுண்டரி உதவியுடன் இந்திய அணி 300 ரன்களை கடந்தது.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. ஒரு நாள் கிரிக்கெட்டில், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 11-வது முறையாகும்.இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எக்ஸ்டிரா வகையில் 16 வைடு உள்பட 29 ரன்களையும் அந்த அணி விட்டுக்கொடுத்தது.அடுத்து 305 ரன்கள் இலக்கை இங்கிலாந்து துரத்துவதற்கு முன்பாக மழை புகுந்து விளையாடியது. இதனால் அரைமணி நேரம் பாதிப்பு ஏற்பட்டதால் 47 ஓவர்களில் 295 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.இந்த இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி இறுதியில் 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு, முதல் பதிலடியை கொடுத்தது.இங்கிலாந்து அணியில் அறிமுக வீரர் அலெக்ஸ் ஹாலஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி வருகிற 30ம் தேதி நாட்டிங்காமில் நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: