செய்திகள் இன்று வானில் 2 நிலா தோன்றுமா?…

இன்று வானில் 2 நிலா தோன்றுமா?…

இன்று வானில் 2 நிலா தோன்றுமா?… post thumbnail image
சென்னை:-வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் எனவும், செவ்வாய் கிரகம் மிக பெரிதாக தெரியும் எனவும் வலைதளத்தில் செய்திகள் உலா வருகின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:-வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் என வலைதளத்தில் புரளி பரவி வருகிறது. இதுதொடர்பாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. இவை வெறும் புரளிதான். இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

செவ்வாயும், பூமியும் சூரியனை மையமாக வைத்து நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு கிரகங்களும் தன் பாதையில் சுற்றி வரும்போது, அவற்றிற்கு இடையே தொலைவு மாறி மாறி அமையும். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேயான சராசரி தொலைவு 22½ கோடி கிலோ மீட்டர் ஆகும்.
மேலும், கிரகங்கள் சுற்றும் பாதை எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. நீள்வட்ட பாதையில் உள்ள தடுமாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு முறையும் அருகாமையில் வரும்போதும் பூமி, செவ்வாய் தொலைவு சற்றே கூடி குறையும்.

கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொலைவு 5½ கோடி கிலோ மீட்டராக இருந்தது. இதுதான் கடந்த 6 ஆயிரம் ஆண்டுகளில் மிக குறைவான தொலைவாக இருந்தது.அதுபோல 2 கிரகங்களும் மிக அருகே வரும் நிலை மறுபடியும் 2287-ம் ஆண்டில் தான் ஏற்படும். எனினும், இந்த நாட்களிலும் வெறும் கண்களுக்கு ஒளி புள்ளியாகத்தான் செவ்வாய் தென்படும். எனவே அறிவியல் பூர்வமற்ற விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி