பூம்புகார் புத்தகங்கள் வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் ஓர் பார்வை…

வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் ஓர் பார்வை…

வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் ஓர் பார்வை… post thumbnail image
வந்தார்கள் வென்றார்கள் பிரபல எழுத்தாளரும் கார்ட்டுனிஸ்ட்டுமான மதன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூலாகும். இதனை ஜுனியர் விகடன் தொடராக வெளியிட்டது. மக்களின் வரவேற்பினைப் பெற்ற இத்தொடர், விகடன் பதிப்பகத்தாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கு எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை எழுதியிருந்தார்கள்.தைமூர் வரலாற்றிலிருந்து, இந்தியாவினை ஆண்ட பாபர், அக்பர் முதலானோர்களின் வரலாற்றினையும் வந்தார்கள் வென்றார்கள் விரிவாக விவரிக்கிறது.

நூலைப் பற்றி:

மொகலாய சாம்ராஜ்யத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை இந்த வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் மிகவும் விரிவாக விளக்குகிறது கி.பி 1000 நூற்றாண்டில் தொடங்கி கி.பி 1858ல் கிழக்கிந்திய கம்பெனிகளின் ஆளுமையின் கீழ் இந்தியா சென்று மொகலாய பரம்பரையின் கடைசி மன்னரான பகதூர்ஷா கைதியாக பர்மாவிற்கு கப்பலில் நாடு கடத்தப்படுவது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை உண்மைக்கு மிக அருகில் இருந்து பேசுகிறது இந்த நூல்.இந்த நூலில் மொத்தமாக இருபத்து ஒன்பது மன்னர்களின் வாழ்க்கை மிக ஆழமாக விவரிக்கப்பட்டு உள்ளது. வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் இருந்து ஒரு சில மன்னர்களைப் பற்றி மட்டும் சற்று விரிவாக காணலாம்…..

டெல்லி:

முக்கியமாக போர் நடந்த இடங்கள் எல்லாம் டெல்லியை சுற்றிய பகுதிகள் என்பதால் டெல்லியை பற்றிய வரலாறு கொஞ்சம். டெல்லியை பற்றிய குறிப்புகள் கி.பி736ல் இருந்து மட்டுமே எழுத்து வடிவில் கிடைக்கின்றன. அங்கு தோண்டி எடுக்கப்பட்ட புதைபடிவங்கள் அனைத்தும் கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. மகாபாரத காலத்தில் பாண்டவர்களால் யமுனை நதிக்கரையில் இந்திரசேனா என்ற பெயரில் உண்டாக்கப்பட்ட நகரமே டெல்லி. பாண்டவர்களுக்கு பிறகு டெல்லியின் நிலைமை யாதென்றே தெரியவில்லை.கி.முவில் வந்த மெகஸ்தனிஸ், ஹிவான்சுவாங் போன்ற வெளி நாட்டு பயணிகளின் குறிப்பிலும் டெல்லியை பற்றி ஏதுமேயில்லை.கி.பி 736ல் தோமர்கள் தில்லிகா என்ற பெயரில் டில்லியை ஆண்டு வந்தார்கள். இவ்வாறு பல தகவல்கள் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் உள்ளன.

ப்ருத்விராஜ்:

நமக்கு மிகவும் பரிட்சயமான ப்ருதிவிராஜ்தான் இவர்.குதிரையில் சென்று சம்யுக்தையை தூக்கிவந்து மணந்தாரே அவரேதான். இவர் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்.ராஜபுத்திர வம்சத்தின் புகழ்பெற்ற மன்னன். கடைசி மன்னனும் கூட. கன்னோசி நாட்டு மன்னன் ஜெயசந்திரனின் மகள் சம்யுக்தையை ப்ருதிவிராஜ் காதலிக்க அவனுக்கு தன் மகளை மணமுடிக்க விருப்பமில்லாத ஜெயசந்திரன், அவசர அவசரமாக சம்யுக்தைக்கு சுயம்வரம் நடத்துகிறான். ப்ருதிவிராஜ்க்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. ப்ருதிவிராஜ் போல ஒரு சிலையை செய்து அரண்மனை வாயிலில் காவலனாக நிறுத்தி வைத்து கேலி செய்யவே, ப்ருதிவிராஜ் குதிரையில் வந்து சம்யுக்தையை அவளது சம்மதத்துடன் தூக்கி செல்கிறான்.இது பற்றி வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் தெளிவாக கூறப்படுகிறது.

முகமது கோரி:

கி.பி 1000ல் இருந்தே சிந்துநதி பகுதியில் ஈரானியர்கள், ஆப்கானியர்கள், துருக்கியர்கள், மங்கோலியர்கள் அனைவரும் ராஜபுத்திர இனத்திற்கு தொல்லை கொடுத்து கொண்டே இருந்தனர். கி.பி 1191ல் ஆப்கானிய மன்னன் முகமது கோரியின் படையை ப்ருதிவிராஜ் தோற்கடித்தான்.இதனால் கோபம் கொண்ட முகமது கோரி 1192ல் மீண்டும் பெரும்படையுடன் வந்து போரிட்டான். அப்போது ப்ருதிவிராஜ்க்கு கன்னோசி மன்னன் ஜெயசந்திரனிடம் இருந்து உதவி வந்திருந்தால் வரலாறு மாறி இருக்கும். கன்னோசி மன்னனும் உதவிக்கு வரவில்லை. ப்ருத்வியும் உதவி கேட்கவில்ல.ப்ருதிவிராஜின் படை தோற்றது.. சிறை பிடிக்கப்பட்ட ப்ருத்விராஜ் முகமது கோரியின் முன்னால் இழுத்து செல்லப்பட கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த ப்ருத்விராஜின் தலை துண்டிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டமாக டெல்லி அரண்மனையில் நுழைந்த கோரியின் படை அரண்டு போய் நின்றது.அரண்மனையில் ஒரு பிணக்குவியலே கிடந்தது. ராணி சம்யுக்தை உட்பட பிற பெண்கள் அனைவரும் தீயில் குதித்து உயிர் துறந்து இருந்தனர்.எல்லாவற்றையும் கொள்ளையடித்த பிறகு முகமது கோரியின் படை படையெடுத்தது. மன்னன் ஜெயசந்திரனின் கன்னோசி நாட்டின் மீது. அந்த போரில் ஜெயசந்திரனும் கொல்லப்பட்டான்..முகமது கோரியிடம் அடிமையாக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் படைத்தளபதியாக உயர்ந்த ‘குத்புதீன் அய்பெக்’ டெல்லியின் மன்னனாக கோரியால் நியமிக்கப்பட்டார்.
இந்த குத்பூதீன் அய்பெக்கால் கட்டப்பட்டது தான் குதுப்மினார்.கி.பி 1368ல் இதன் மேல்தளத்தை இரண்டு பால்கனியாக பிரித்து கட்டியவர்தான் பிரோஷா துக்ளக். கி.பி 1848ல் கர்னல் ராபர்ட் ஸ்மித் குதுப்மினார் ஸ்தூபியின் மீது ஏற்றி வைத்த மேற்கூரை இடி தாக்கியதால் அகற்றப்பட்டு இன்றும் குதுப்மினாருக்கு அருகில் காட்சி அளிக்கிறது. குதுப்மினாருக்கு அருகே அலாவுதீன் கில்ஜியால் கட்டப்பட்ட ஒரு அரைகுறை ஸ்தூபியும் இன்றளவும் இருக்கிறது.இவர்களில் வரலாறுகள் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் தெளிவாக கூறப்படுகிறது.

முகமது கஜினி:

முகமது கஜினியை பற்றி நாம் என்ன படித்தோம். 17 முறை தோற்றாலும் விடாமுயற்சியால் பதினெட்டாவது முறை அவர் வெற்றி பெற்றார் என்று தானே.ஆனால் உண்மையான வரலாறு அவ்வாறு இல்லை நண்பர்களே.கஜினியின் முதல் 17 படையெடுப்புகளும் கூட வெற்றிதான். ஏனென்றால் முகமது கஜினி முகமது கோரியை போல் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் வந்தவன் அல்ல.கொள்ளையடிக்கும் நோக்கம் மட்டுமே பிரதானம். 17 படையெடுப்பிலும் அவன் வெற்றிகரமாக கொள்ளையடித்தே திரும்பினான். அவரின் படையெடுப்பை பற்றி வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் தெளிவாக கூறப்படுகிறது. கி.பி 1025ம் ஆண்டு ராஜஸ்தான் பாலைவனம் வழியாக குஜராத்தில் நுழைந்த கஜினியின் படை. புகழ்பெற்ற சோம்நாத் கோயிலை நோக்கி சென்றது. கோயில் என்பதால் தாக்குவதற்கு ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்று கஜினி முகம்மது எண்ணினான்.ஆனால் சாதாரண குடியானவர்கள் முதற்கொண்டு பூசாரிகள் வரை அனைவரும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு போரிட்டனர். கோபம் கொண்ட கஜினி முகம்மது எல்லாரையும் கொல்ல உத்தரவிட்டான்.அன்று அந்த கடற்கரையில் மட்டும் கொல்லப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்திற்கும் அதிகம். காந்தசக்தியால் கட்டப்பட்ட மிதக்கும் சிவலிங்கம் இடித்து தள்ளப்பட்டு அதற்கு உள்ளே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 6 டன் தங்க நகைகளை கஜினியின் படை கொள்ளையடித்து கொண்டு சென்றது. கஜினிக்கு ஒரு பழக்கம் இருந்தது.அவன் தோற்கடித்த மன்னர்களின் கைவிரல்களை வெட்டி சேமித்துக் கொண்டிருந்தான். இப்படிப்பட்ட ஒரு காட்டுமிராண்டி கொள்ளைக்காரனை எதிர்க்கும் திறன் பெற்ற ஒரு இந்திய மன்னன் இருக்கத்தான் செய்தான். ஆனால் அவன் என்ன காரணத்தினாலோ வட இந்தியாவில் தன் ஆதிக்கத்தை பரப்ப விரும்பாமல் கடல் கடந்து சென்று இலங்கை, சுமித்ரா, பர்மா போன்ற நாடுகளை கைப்பற்றுவதில்தான் ஆர்வம் கொண்டு இருந்தான்.அந்த மாவீரன் தான் ‘ராஜேந்திர சோழன்’. ஏனோ நமது மாவீரன் ராஜேந்திர சோழனும், அந்த காட்டுமிராண்டி கொள்ளைக்காரன் முகமது கஜினியும் சந்திக்காமலே போய்விட்டனர்… அப்படி சந்தித்து இருந்திருந்தால் வரலாறு வேறுமாதிரி மாறி இருக்கலாம்… ஆனால் இந்த முகமது கஜினி வந்ததால் தான் மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய மன்னர்களான பாபரும், அக்பரும் நமக்கு கிடைத்தனர்.

தைமூர்:

மங்கோலிய துருக்கிய கலப்பினத்தின் மற்றொரு காட்டுமிராண்டி, போரில் விஷ அம்பு தைத்ததால் ஒரு காலை விந்தி விந்தி நடப்பான். இதனால் அவனை நொண்டி என்றும் சிலர் மறைமுறைமாக விளிப்பர். ஆனால் இவன் தோல்விகண்ட போரே கிடையாது.இவனுக்கு நம் யானைப்படையை கண்டு தான் பயம். அவர்கள் யானையையே பார்த்தது கிடையாது. நம் யானைப்படைகளின் யானைகளை பார்த்தவன் வியப்புடன் இந்த கரிய குன்று போன்ற பிராணிகள் எப்படி இவ்வளவு பெரிய உருவத்தை தூக்கிக் கொண்டு இவ்வளவு வேகமாக ஓடுகின்றன என வியந்தான். அடுத்து ஆணையிட்டான்.அவன் யானைப்படைகளை அடக்கியதை பற்றி வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் தெளிவாக காணலாம். போர்களத்தில் ஏற்கனவே குத்திவைத்து மண்ணால் மூடப்பட்டு இருந்த சூலாயூதங்கள் யானைகளின் கால்களை பதம் பார்க்க யானைகள் மதம் பிடித்து ஒடத் தொடங்கின.மேலும் வெளிவட்டத்தில் இருந்து எருமை, குதிரை இவைகளின் பின்னால் வைக்கோலை வைத்து கட்டி அதன் வட்டங்கள் சுருங்கிக் கொண்டே வர யானைகளை நெருங்கும் சமயத்தில் வீரர்கள் வைக்கோலின் மீது தீயை பொருத்திவிட நெருப்பு வளையம் தங்களை நெருங்குவதை கண்டு பயத்தில் பிளிறிய யானைகள், கண் மண் தெரியாமல் ஓடி இந்திய படைகளுக்கே பெருத்த சேதத்தை ஏற்படுத்தின.ஒரு நாள் மாலைக்குள் போர் முடிந்தது. பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட ஒரு இலட்சம் கைதிகளின் தலைகள் ஒரு மணி நேரத்திற்குள் வெட்டப்பட்டன. நேரத்தை மிச்சப்படுத்த தைமூர் தனக்கு குர்-ஆன் வாசிக்கும் முதியவர் கையிலும் ஒரு வாளையை கொடுத்து தலையை வெட்ட சொன்ன குரூரமும் நடந்தது.. அவனுக்கு யானைகளின் கலர் பிடிக்கவில்லை என்று கூறி சிவப்பு, பச்சை, மஞ்சள் கலரில் யானைகளுக்கு பெயிண்ட் அடித்து அவைகளையும், கலைஞர்கள், ஓவியர்கள், கட்டட கலை நிபுணர்கள் இவர்களுடன் யானைகளும் துருக்கிக்கு அவனோடு பயணித்தன.

பாபர்:

பாபரின் வாழ்க்கையில் அவர் சிலகாலம் நாடோடியாக திரிந்தது.வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது. தனித்துவிடப்பட்ட தன் நிலையை எண்ணி பாலைவனத்தில் அழுது புலம்பியது, சாமர்கண்ட் கோட்டையில் முற்றுகைக்கு ஆளான போது, மக்களுடன் சேர்ந்து கழுதை இறைச்சியை தின்றது என பல உண்மைகளை நாம் அறிந்து கொள்ளமுடியும். மேலும் பாபரின் தனிப்பட்ட இயல்புகளான, இரு நண்பர்களை தனது புஜங்களில் தொங்க சொல்லி மைதானத்தில் ஓடுவது, எந்த ஆழமான ஆற்றைக் கண்டாலும் அதில் இறங்கி ஒரு கரையில் இருந்து மற்றொரு கரை நோக்கி நீந்திக் கடப்பது இந்தியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய போதும், பாபரின் ஆசை சாமர்கண்ட் நகரையே சுற்றி வந்த தகவலும், கடைசி வரை அவரால் சாமர்கண்டை வெல்ல முடியாமல் போன துரதிஷ்டத்தை எண்ணி கலங்குவது, இந்தியாவின் வெயிலை கண்டு பின்வாங்க எண்ணிய வீரர்களிடம் பாபர் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை, போருக்கு போக வேண்டாம் என்று தடுத்த ஜோசியரை, போரில் வெற்றி பெற்று வந்து அவருக்கு பணமும் கொடுத்து நாடு கடத்தியது.ராஜபுத்திர வீரர்களின் வீரத்தை குறிப்பாக ராணாசிங்கின் வீரத்தைக் கண்டு மெய்சிலிர்த்தது. என பல முக்கியமான தகவல்களை வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் காணலாம்.

அக்பர்:

அக்பர் தன் சிறுவயதில் தனது கார்டியனாக இருந்த பைராம்கானுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் தந்தை ஹீமாயூன் இறந்துவிடவே, மக்களுக்கு அதை தெரிவிக்காமல் வேறு ஒரு நபரை மன்னர் போல இருளான இடத்தில் அமர்த்தி நான்கு நாட்கள் ஆள செய்து.போரில் அக்பர் வெற்றி பெற்றவுடன்.. பஞ்சாப் மாநிலத்தில் இருந்த ஒரு வயல்வெளியில் தற்காலிக மேடை அமைத்து அதில் பைராம்கான் அக்பருக்கு முடிசூட்டி மன்னராக அறிவிக்கிறார். அந்த தற்காலிக மேடையை இன்றும் கூட பஞ்சாப் மாநிலத்தில் அந்த மேடைகளுக்கு இடையில் காணலாம்.அக்பர் எல்லா மதத்தையும் சமமாக பாவித்தவர். இந்து மதத்தை மதிக்க வேண்டும் என்பதாலேயே ராஜபுத்திர இனத்தை சேர்ந்த ஒர் இந்து பெண்ணை மனைவியாக்கி கொண்டவர். பீர்பாலுக்கும் அக்பருக்கும் இடையிலான உறவு, பீர்பால் இறந்ததை கேட்டு அக்பரின் நிலை, பைராம்கானை யானை பாகனை கொன்றதால் கடிந்து கொண்ட அக்பர், ஒற்றை கண்ணுடன் வீரமாக போர் புரிந்த ஹேமுவை அக்பர் வெல்வது, “தீன் இலாஹி” இதுவே இந்தியாவின் இப்போதைய தேவை என எல்லா மதத்திலும் உள்ள நல்ல நல்ல கோட்பாடுகளை எடுத்து புதிய மதத்தை நிறுவ முயலுவது என அக்பரின் வாழ்க்கையிலும் பல முக்கியமான தருணங்களை அழகாகவும், ஆழமாகவும் எடுத்து கூறுகிறது வந்தார்கள் வென்றார்கள் புத்தகம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி