செய்திகள்,விளையாட்டு இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட்: 152 ரன்களில் சுருண்டது இந்தியா!…

இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட்: 152 ரன்களில் சுருண்டது இந்தியா!…

இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட்: 152 ரன்களில் சுருண்டது இந்தியா!… post thumbnail image
மான்செஸ்டர்:-இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒன்று வீதம் வென்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது.இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் ஆடுகளத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றமாக ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, முகமது ஷமி நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கவுதம் கம்பீர், அஸ்வின், வருண் ஆரோன் ஆகியோர் இடம் பிடித்தனர். இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

முந்தைய நாள் இரவில் பெய்த மழையாலும், காலையில் சிறிது நேரம் விழுந்த தூரலாலும் ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.டாஸ் வென்ற உற்சாகத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் முதலில் களம் இறங்கினர். ஆனால் மழையின் தாக்கமும், வானிலையும் எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் கையை ஓங்க வைத்து விட்டது. குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஸ்டூவர்ட் பிராட்டும் கைகோர்த்து ‘ஸ்விங்’ தாக்குதலில் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.தொடக்க ஆட்டக்காரர்கள் கம்பீர் (4 ரன்), முரளிவிஜய் (0), புஜாரா (0), விராட் கோலி (0) ஆகியோர் வெறும் 8 ரன்னுக்குள் இந்திய அணியை நெருக்கடியில் சிக்க வைத்து விட்டு அன்ன நடைபோட்டு பெவிலியன் திரும்பினர். இந்த பேரிடியில் இருந்து அணியை மீட்க கேப்டன் டோனியும், ரஹானேவும் போராடினர். துரதிர்ஷ்டவசமாக உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக ரஹானே (24 ரன், 52 பந்து, 3 பவுண்டரி) ஸ்லிப்பில் கேட்ச் ஆக, இந்திய அணி மீண்டும் தடம் புரண்டது. அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா (0), அவரது புதிய எதிரி ஆண்டர்சனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இந்த இக்கட்டான சூழலில் டோனியுடன், அஸ்வின் ஜோடி சேர்ந்தார். தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினால், ஸ்லிப்பில் தான் கேட்ச் ஆக வேண்டி வரும் என்பதை உணர்ந்த அஸ்வின் கொஞ்சம் அதிரடி காட்டினார். ஆண்டர்சனின் பந்து வீச்சில் ஒரு சிக்சரும் பறக்க விட்டார். இதனால் இந்திய அணி ஒரு வழியாக 100 ரன்களை கடந்தது. கேப்டன் டோனியும் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.ஸ்கோர் 129 ரன்களாக உயர்ந்த போது, அஸ்வின் (40 ரன், 42 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டூவர்ட் பிராட் பவுன்சராக வீசிய பந்தை தூக்கியடித்த போது கேட்ச் ஆகி போனார். அதைத் தொடர்ந்து புவனேஷ்வர்குமார் டக்-அவுட் ஆக, கேப்டன் டோனியின் போராட்டமும் 71 ரன்களில் (133 பந்து, 15 பவுண்டரி) முடிவுக்கு வந்தது. இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 46.4 ஓவர்களில் 152 ரன்னில் அடங்கி போனது.இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட் மேல் கைப்பற்றுவது இது 12-வது முறையாகும். வேகப்பந்து வீச்சு தலைதூக்கியதால் கடைசி வரை சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து கேப்டன் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. சாம் ராப்சன் (6 ரன்), கேப்டன் அலஸ்டயர் குக் (17 ரன்) கேரி பேலன்ஸ் 33 வெளியேறினாலும், அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடினர். 35 ஓவர் முடிந்திருந்த போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி