செய்திகள்,திரையுலகம் சண்டியர் (2014) திரை விமர்சனம்…

சண்டியர் (2014) திரை விமர்சனம்…

சண்டியர் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
தஞ்சை மாவட்டத்தில் வசித்து வரும் பாண்டிதுரை அரசியல் ஆர்வம் உடையவர். ஊரில் சேர்மன் ஆவதற்கு முயற்சி செய்து வருகிறார். இவருடைய அப்பாவும் முன்னாள் சேர்மன் தஞ்சிராயரும் நண்பர்கள். தஞ்சிராயரின் மகனான நாயகமும் சேர்மன் பதவிக்கு முயற்சி செய்து வருகிறார். இவர் தந்திரமாக பாண்டிதுரை மீது பொய் கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு சேர்மன் ஆகிவிடுகிறார்.

ஜெயிலில் இருந்து திரும்பும் பாண்டிதுரை, நாயகத்தை எப்படியாவது சேர்மன் பதவியில் இருந்து நீக்கி விட்டு பதவியைப் பிடிக்க வேண்டும் என்று பல திட்டங்கள் போடுகிறார். அத்திட்டத்தில் ஒன்றாக நாயகத்தின் வீட்டுப் பெண்ணான கயலை காதலித்து அவள் மூலம் நாயகத்தை சேர்மன் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார். இதனால் கயலை சுற்றி சுற்றி வருகிறார் பாண்டிதுரை. முதலில் இவரை வெறுக்கும் கயல் பின்பு காதலிக்க ஆரம்பிக்கிறாள்.இதற்கிடையில் நாயகம் நடத்தும் பாரில் திருட்டு தனமாக விற்ற மதுக்களை குடித்து சிலர் இறந்து விடுகிறார்கள். இந்த காரணத்தை பாண்டிதுரை சாதகமாக பயன்படுத்தி நாயகத்தை சேர்மன் பதவியிலிருந்து இறக்கி விடுகிறார். இதிலிருந்து இவர்களின் பகை மேலும் அதிகரிக்கிறது. இந்த பகை முற்றி ஒருவரை ஒருவர் வெட்டிக்கொள்ளும் நிலைக்கு போகிறது.பதவி வெறி சண்டையில் வென்றது யார்? கயல், பாண்டித்துரை ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

பாண்டிதுரை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் ஜெகன், நாத்திகனாவும் அரசியல்வாதியாகவும் தன் நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இவர் பேசும் நாத்திக வசனங்கள் அருமை. குறிப்பாக ‘நீ கும்பிடுற சாமியையும் ஒரு கண்ணுக்குட்டியையும் குளத்துல போடு. எது நீந்தி கரைக்கு வருதோ, அதை கும்பிடு’ என்கிற வசனம் பார்ப்பவர்களை நிமிர வைக்கிறது. படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் நாயகி கயல். புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடிப்பில் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். காதல் காட்சிகளிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் அழகான நடிப்பு.

தஞ்சிராயராக நடித்திருக்கும் டி.ரவி முதியவர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இவர் வயதுக்குரிய கதாபாத்திரத்தை பொறுப்புடனும், அமைதியாகவும் நடித்திருக்கிறார். மேலும் நாயகம், சிங்கம்புலி, சிந்து, முருகதாஸ் ஆகியோரும் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள்.அரசியலில் பதவி வெறிக்காக நடக்கும் கொலைகளை மையக்கருவாக வைத்துக் கொண்டு அதற்கு சிறப்பான திரைக்கதை அமைத்து ஆழமான வசனங்களை எழுதி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் சோழதேவன். காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு குறையாமல் கதையை நகர்த்தி சென்றிருப்பதும், புதுமுகங்களை வைத்து அவர்களிடம் சிறப்பான நடிப்பை வாங்கியிருப்பது அருமை.யத்தீஷ் மகாதேவின் இசை படத்திற்கு வலுவாக அமைந்திருக்கிறது. ஓரிரு பாடல்கள் ரசிக்கலாம். தஞ்சை மாவட்டத்தின் அழகை நம் கண்முண் நிறுத்திய ஒளிப்பதிவாளர் ஹரிபாஸ்கரை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘சண்டியர்’ வீரன்…………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி