செய்திகள்,விளையாட்டு இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து ரன் குவிப்பு!…

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து ரன் குவிப்பு!…

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து ரன் குவிப்பு!… post thumbnail image
சவுத்ஆம்ப்டன்:-இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்ஆம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதல் இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு குக், பேலன்ஸ் இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 95 ரன்கள் குவித்த துவக்க வீரர் குக், ஜடேஜாவிடம் விக்கெட்டை இழந்தார். பேலன்ஸ் சதம் அடித்து அசத்தினார்.

இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. பேலன்ஸ் 104 ரன்களுடனும், இயன் பெல் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து பேட்டிங்கில் கலக்கிய பேலன்ஸ், 150 ரன்களைக் கடந்தார். மேற்கொண்டு 6 ரன்கள் எடுத்த நிலையில் அவரது விக்கெட்டை ரோகித் சர்மா கைப்பற்றினார்.பேலன்சைத் தொடர்ந்து களமிறங்கிய ரூட் (3), மொயீன் அலி (12) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியபோதும், மறுமுனையில் அதிரடியாக ஆடிய இயன் பெல் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இயன் பெல், 150 ரன் என்ற அடுத்த இலக்கையும் கடந்தார். அவருக்கு இணையாக விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்டரும் விளையாட இங்கிலாந்து அணி 500 ரன்னைக் கடந்து வலுவான நிலையை எட்டியது.

ஜோஸ் பட்டர் டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்த பந்தில் இயன் பெல், புவனேஸ்வர்குமார் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்சில் 256 பந்துகளை எதிர்கொண்ட இயன் பெல், 19 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 167 ரன்கள் குவித்தார்.569 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வலுவான நிலையில் இருந்தபோது பட்டர் 85 ரன்களில் அவுட் ஆனார். அத்துடன் முதல் இன்னிங்சை இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி