சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பலி!…

விளம்பரங்கள்

கோலாலம்பூர்:-நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் கடந்த 17ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது.இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் மலேசிய தமிழ் நடிகை சுபா ஜெயா (வயது 38) என தெரிய வந்துள்ளது. இவர் கோலாலம்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 31 வயதில் நடிக்க வந்தார்.

‘ரிலேசன்ஷிப் ஸ்டேட்டஸ்’, ‘டோகாக்’ ஆகிய மலேசிய சினிமா படங்களில் நடித்துள்ளார். மேலும், மலேசிய டி.வி. ஒன்றில் வெளி வந்த ‘சுகமான சுமைகள்’ உள்ளிட்ட பல்வேறு டி.வி. தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘போர்பிளே’, ‘சார்லிஸ் ஆன்டி’, ‘ஹங்க்ரி பார் ஹோப்’ ஆகிய நாடகங்களிலும் நடித்துள்ளார்.பால் கோஸ் என்ற நெதர்லாந்து நாட்டு வாலிபரை காதலித்து மணந்தார். இந்த தம்பதியருக்கு காயிலா மாயா ஜெய் கோஸ் என்று ஒரு மகள் 2012ம் ஆண்டு பிறந்தாள்.பிறந்து 21 மாதங்கள் ஆன நிலையில், மகள் காயிலாவை, ஆம்ஸ்டர்டாமில் உள்ள தன் பெற்றோரிடம் எடுத்துச்சென்று காட்டி வர பால் கோஸ் நினைத்தார். மனைவி சுபா ஜெயாவிடம் பேசினார். அவரும் சம்மதித்தார். இதையடுத்து இந்த தம்பதியர் தங்கள் செல்ல மகளுடன் ஆம்ஸ்டர்டாமுக்கு சென்றனர்.

அங்கு சென்று குழந்தையை அதன் தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களிடம் காட்டி விட்டு மீண்டும் கோலாலம்பூருக்கு மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், எம்.எச்.17 மூலம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, மூவரும் ஒரே நேரத்தில் பலியாகி விட்டனர்.மரணத்தை தழுவுவதற்கு இரண்டு தினங்கள் முன்பாகத்தான் சுபா ஜெயா, தனது 38–வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளைக் கொண்டாடிய இரண்டு தினங்களில் மரணம் தன்னை வந்து தழுவும் என அவர் நினைத்தும் பார்த்திருக்கவில்லை.சுபா ஜெயா நடித்த பல குறும்படங்களை இயக்கியவர் மலேசிய கதாசிரியர், டைரக்டர் காய்ரில் பஹர். இவர் சுபா ஜெயா பற்றி கூறும்போது, சுபா ஜெயா ஒருபோதும் புகழுக்காக ஏங்கியது கிடையாது. ஆனால் நடிப்பதில் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். நாடகங்களில் நடித்துத்தான் திரையுலகுக்கு வந்தார். அவர் ஒரு போற்றத்தக்க பெண்மணி. தன் எதிர்காலத்தைப் பற்றி நிறைய திட்டங்கள் வைத்திருந்தார். இவர் இறந்து விட்டார் என்று நினைக்கவே முடியவில்லை என்றார்.

சுபா ஜெயா, தனது தந்தை ஜெயரத்னத்துடன் ஒரு டி.வி. ‘ரியாலிட்டி ஷோ’வில் தோன்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.சுபாவின் மறைவு குறித்து அவரது நண்பர் சிவா என்பவர், அகாலமாக மறைந்து விட்டீர்கள் சுபா. உங்கள் திருமணத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தீர்கள். நிறைவேற்றுவதற்கு நிறைய கனவுகளை வைத்திருந்தீர்கள். அற்புதமான புன்னகை சிந்தும் அழகு மகளை பெற்றிருந்தீர்கள். இப்போதோ நீங்கள் மூவரும் ஒரே நேரத்தில் போய் விட்டீர்கள். உங்களை இழந்து தவிக்கிறோம் என ‘பேஸ் புக் சமூக வலைத்தளத்தில் உருக்கமாக கூறி உள்ளார்.நடிகரும், டைரக்டருமான பாகி ஜெய்னல், சுபா ஜெயா, பால், பேபி காயிலா.. நீங்கள் மேகங்களுடன் மறைந்து விட்டீர்கள் என உருக்கமுடன் அதே வலைத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: