செய்திகள்,திரையுலகம் சதுரங்க வேட்டை (2014) திரை விமர்சனம்…

சதுரங்க வேட்டை (2014) திரை விமர்சனம்…

சதுரங்க வேட்டை (2014) திரை விமர்சனம்… post thumbnail image
சிறு வயதிலேயே வறுமை, தாயின் வைத்தியச் செலவுக்காக பணம் இல்லாத சூழ்நிலை, துரோகம் என எல்லாவற்றிலும் விரக்தியான நடராஜ், பணம் தான் வாழ்க்கையில் எல்லாம், இந்த பணத்தை சம்பாதிக்க என்னன்னவோ செய்யும் போது, அந்த பணத்தை சம்பாதிக்க தான் என்னவெல்லாம் செய்யலாம் என்று எண்ணி களமிறங்குகிறார்.திறமை இருந்தால் பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று மண்ணுளி பாம்பு விற்பனை, எம்.எல்.எம்., ஈமு கோழி விற்பனை என எல்லாவற்றிலும் நண்பர்கள் உதவியுடன் மோசடி செய்து பணத்தை சம்பாதித்து வரும் நடராஜ், எம்.எல்.எம். நிறுவனம் நடத்தும்போது நாயகி இஷாரா இவரிடம் வேலை கேட்டு வருகிறார்.

நாயகியின் பரிதாபத்தை வைத்து அதையே காசாக்கும் முயற்சியில் அவளை வேலையில் அமர்த்தி, இவருடைய மோசடி வேலைக்கு அவளையும் உட்படுத்துகிறார். ஆனால், நாயகியோ இவரைப் பற்றி முழுவிவரமும் அறியாமல் அவர் சொன்ன வேலைகளை செய்கிறார். இடையில் நடராஜ் மீது காதலும் கொள்கிறார்.நடராஜ் மோசடிக்காரன் என்று இஷாராவுக்கு ஒரு நாள் தெரிய வருகிறது. அவரை திருந்தும்படி வற்புறுத்துகிறார். ஆனால், நடராஜ் அதை ஏற்றுக்கொள்ளாமல் இஷாராவை விட்டு பிரிகிறார். இந்நிலையில், போலீசாரின் பிடியில் திடீரென மாட்டிக் கொள்கிறார் நடராஜ். அப்போது அவரது நண்பர்கள், நடராஜுக்கு எதிராக சாட்சி சொல்லிய அனைவருக்கும் பணத்தைக் கொடுத்து சரிகட்டி, அவரை வெளியே கொண்டு வருகின்றனர். ஆனால், நடராஜால் பாதிக்கப்பட்ட ஒருவர் மட்டும் தன்னுடைய பணத்தை எப்படியாவது அவனிடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ரவுடியின் உதவியை நாடுகிறார்.

கோர்ட்டிலிருந்து வெளியே வரும் நடராஜை அந்த ரவுடிகள் ஜீப்பில் கடத்திச் சென்று பாழடைந்த ஒர்க் ஷாப்பில் கொண்டுபோய் அவரை அடித்து பணத்தை கொண்டு வரச் சொல்கின்றனர். உயிருக்கு பயந்து நடராஜ், தனது நண்பர்களிடம் பணத்தை கொண்டு வரச் சொல்கிறார். நண்பர்களும் பிரிந்து கிடக்கும் அனைத்து பணத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டுவரும்போது பணத்தின் மீதுள்ள ஆசையால், அவர்கள் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகி விடுகிறார்கள். இதனால் கோபமடைந்த அந்த ரவுடி அவனை கொலை செய்ய முடிவெடுக்கிறார். அப்போது 100 கோடி ரூபாய் சம்பாதிக்க ஒரு திட்டம் வைத்திருப்பதாக அந்த ரவுடிகளுக்கு ஆசை வார்த்தை கூறி அவர்களின் மனதை மாற்றுகிறார் நடராஜ்.
அவர்களும், பணத்தின் மீதுள்ள ஆசையால் இவரை கொல்லாமல் விட்டுவிடுகின்றனர். பின்னர், அந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு காயாக நகர்த்திவரும்போதே இடையில் நடராஜ் அந்த ரவுடிக் கும்பலை போலீசில் மாட்டிவிட்டு தப்பித்து சென்றுவிடுகிறார். அனாதை ஆசிரமத்தில் பணிபுரிந்து வரும் நாயகி இஷாராவை சந்தித்து அவரையே திருமணம் செய்துகொண்டு மலையடிவாரத்தில் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த ரவுடி கும்பல் நடராஜை தேடி கண்டுபிடித்து, 100 கோடி ரூபாய் சம்பாதிக்கும் திட்டத்தை செயல்படுத்த நடராஜை வற்புறுத்துகின்றனர். இல்லையென்றால், நடராஜையும் அவரது மனைவியையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகின்றனர். இதற்கு பயந்து நடராஜ் 100 கோடி ரூபாய் சம்பாதிக்கும் திட்டத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். இறுதியில், இந்த திட்டத்தை நடராஜ் எப்படி செய்து முடித்தார்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக சொல்லியிருக்கிறார்கள்.நட்டு என்ற நடராஜின் யதார்த்தமான முகத்தோற்றம், அலட்டிக் கொள்ளாத நடிப்பு, மக்களை ஏமாற்ற இவர் போடும் திட்டம், அதை செயல்படுத்தும் விதம், வசனங்கள் உச்சரிக்கும் விதம் என அனைத்தும் பார்ப்பவர்களை அசத்துகிறது. ரைஸ் புல்லிங் விற்பனையின் போது தொழிலதிபருடன் இவர் பேசும் பேச்சு நம்மையே மயிர்க்கூச்செரிய வைக்கிறது.நாயகி இஷாரா அழகாக வருகிறார். அளவான நடிப்பு. படத்தில் நடித்திருக்கும் நிறைய பேர் புதுமுகங்கள் என்றாலும், புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு தெளிவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். செட்டியாராக வரும் இளவரசுவின் நடிப்பும் சூப்பர். அறிமுக இயக்குனர் எச்.வினோத் அறிமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு படத்தை எடுத்திருக்கிறார்.

நாம் அனைவரும் பார்த்து, அறிந்த விஷயத்தை கதையாக எடுத்துக்கொண்டு, அதற்கு அற்புதமான திரைக்கதை அமைத்து திறம்பட இயக்கியிருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே இவருடைய வசனங்கள்தான். ‘உன்னை ஏமாத்துறவன் ஒரு வகைல உனக்கு குரு. ஏன்னா பிழைக்குற தந்திரத்தை அவன் சொல்லிதர்ரான்னு நினைச்சுக்க’ என்பது போன்ற வசனங்கள் படங்கள் முழுவதும் வலம் வருவது சுவாரஸ்யம்.
விறுவிறுப்பான சதுரங்க ஆட்டம் பார்ப்பது போல் மிக அருமையாக படத்தை தந்திருக்கிறார். ஷான் ரோல்டன் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல இவரது இசை பக்கபலமாக இருக்கிறது. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் பொட்டல்காடு, நெடுஞ்சாலையில் கார் செல்லும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

மொத்தத்தில் ‘சதுரங்க வேட்டை’ புத்திசாலித்தனம்…….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி