செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஜெர்மனியை மெஸ்சி தோற்கடிக்க வேண்டும் என நெய்மர் விருப்பம்!…

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஜெர்மனியை மெஸ்சி தோற்கடிக்க வேண்டும் என நெய்மர் விருப்பம்!…

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஜெர்மனியை மெஸ்சி தோற்கடிக்க வேண்டும் என நெய்மர் விருப்பம்!… post thumbnail image
பிரேசில்:-உலக கோப்பை கால்பந்தில் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் முதுகெலும்பில் காயம் அடைந்தார். இதனால் போட்டியில் இருந்து விலகினார். அவர் இல்லாமல் விளையாடிய பிரேசில் அணி அரை இறுதியில் ஜெர்மனியிடம் தோற்று வெளியேறியது.இந்நிலையில் நெய்மார் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பிரேசில் தோல்வி பற்றி கூறியபோது கண்கலங்கினார். உடனே தலையை குனிந்தப்படி கண்ணீரை துடைத்து கொண்டார்.அதன்பின் உணர்ச்சியை கட்டுபடுத்தி கொண்டு பேசினார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:–

என்னை காயப்படுத்திய ஜூனிகா அடுத்த நாள் என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் அவரை வெறுக்கவில்லை. அவர் வேண்டுமென்றே காயப்படுத்தியதாக நினைக்க வில்லை.காயம் பற்றி பேசுவது கடினமாக இருக்கிறது. முதுகெலும்பில் இன்னும் 2 செ.மீ விலகி இருந்தால் வீல்சேரில் தான் அமர்ந்து வந்து இருப்பேன்.நாங்கள் சாம்பியன் பட்டம் பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் அதில் தோற்றுவிட்டோம். பிரேசில் ஒரு நல்ல அணி. இருந்தபோதிலும் திறமையை காட்ட தவறிவிட்டோம்.இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா அணியில் எனது நண்பர் லியோனல் மெஸ்சி உள்ளார். அவர் திறமையான வீரர். அவரும், நானும் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறோம். அவர் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியானவர். அவரை நான் உற்சாகப்படுத்துவேன். இறுதிப்போட்டியில் ஜெர்மனியை அணியை அவர் தோற்கடிக்க வேண்டும். அது நடக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

நாளை நடக்கும் 3–வது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்தை எதிர் கொள்ளும் பிரேசில் அணி பயிற்சி முகாமுக்கு நெய்மார் சென்றார். அவரை சக வீரர்கள் வரவேற்றனர். பயிற்சியாளர் ஸ்கோலரி கட்டி தழுவி ஆறுதல் கூறினார்.தோல்வியால் துவண்ட தனது அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய நெய்மர் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாடினார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ஜெர்மனிக்கு எதிரான அரை இறுதி போட்டியை நெய்மர் தனது குடும்பத் துடன் டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். ஜெர்மனி கோல் மழை பொழிந்ததால் வெறுப்பின் உச்சத்துக்கே சென்று விட்டார்.ஜெர்மனி 7–0 என்ற கோல் கணக்கில் இருந்த போது டி.வி.யை அணைத்து விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். இதனால் கடைசி கட்டத்தில் பிரேசில் வீரர் ஆஸ்கர் அடித்த கோலை அவர் பார்க்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி