அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!…

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!…

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!… post thumbnail image
புதுடெல்லி:-16வது பாராளுமன்றத்தின் முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 14ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 28 அமர்வுகளில் 168 மணி நேரம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும்.இந்த தொடரில் நாளை ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா தாக்கல் செய்கிறார். ஏற்கனவே ரெயில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டதால், ரெயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பு எதுவும் இருக்காது என்று தெரிகிறது. புதிய திட்டங்கள், ரெயில்கள் பற்றிய அறிவிப்புகள் ரெயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும்.நாளை மறுதினம் பொருளாதார ஆய்வறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வருகிற 10ம் தேதி 2014-2015-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார்.சாமானிய மக்களை வாட்டும் பணவீக்கம், வளர்ச்சி விகித குறைவு, முதலீடுகளில் தேக்கம், கடும் நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை தேர்தலின்போது முன்வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதால் இதனை சமாளிக்கும் வகையில் பட்ஜெட்டில் சில சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.குறிப்பாக, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் நிதி மந்திரி அருண்ஜெட்லி, மாத சம்பளக்காரர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், வருமான வரிச்சலுகைகளையும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில்துறைக்கு வரி சலுகைகளையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரம் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோருக்கு கூடுதலாக வருமான வரி விதிக்கப்படலாம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கடந்த ஆண்டு தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. இந்த வரியை மத்திய அரசு குறைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.பருவ மழை பொய்த்துப்போனதால் வேளாண் உற்பத்தி குறைவின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சாதகமான அறிவிப்புகளை மத்திய நிதி மந்திரி வெளியிடுவார் என்றும் கருதப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படலாம்.பிரதமர் நரேந்திர மோடி சில வாரங்களுக்கு முன்பு கோவாவில் பேசும்போது, “நாட்டின் நிதி ஆரோக்கியம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனை சீர்செய்ய கடுமையான, கசப்பான முடிவுகள் நமக்கு தேவை. அப்போதுதான் நிதிநிலைமையை நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியும். நாட்டின் நன்மையை கருதி எனது அரசு எடுக்கும் இந்த முடிவுகளை நாட்டின் சாமானிய மனிதர்களும் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.எனவே, நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட்டில், நாட்டின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் கடுமையான முடிவுகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, ஈராக்கில் வசிக்கும் இந்தியர்களின் நிலை குறித்து பாராளுமன்ற இரு அவைகளிலும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
இந்த கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் விலை உயர்வு, ரெயில் கட்டண உயர்வு, கூட்டமைப்பு முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப திட்டமிட்டு உள்ளன. இதனால் பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தின் பெயர் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவருக்கு நெருக்கடி அளிக்கப்பட்ட விவகாரம், மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை ராஜாங்க மந்திரி நிஹல்சந்த் கற்பழிப்பு புகாரில் சிக்கியது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுவதற்கு தயாராக இருக்கின்றன.
பாராளுமன்றத்தில் 44 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை அளிக்க இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மறுத்துவருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளும் கட்சியுடன் காங்கிரஸ் கடும் மோதலில் ஈடுபடும் என்று தெரிகிறது.

இந்த தொடரில், பல்வேறு அமைச்சகங்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான அனுமதியையும் பெறவேண்டி உள்ளது. இதன் மீதான விவாதத்திற்கு பிறகு வருகிற 31-ந் தேதிக்குள் இந்த நிலைக்குழுக்கள் அமைக்கப்படும்.
எதிர்க்கட்சிகள் எழுப்பவிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு கூறுகையில், ‘எந்த பிரச்சினை என்றாலும் அதன்மீது விவாதம் நடத்த மத்திய அரசு தயாராகவே இருக்கிறது. இதற்கு பாராளுமன்றத்தின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் போதிய ஒத்துழைப்பு தரவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.திரிணாமுல் காங்கிரசும், இடது சாரிகளும் ரெயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு, விலைவாசி உயர்வு பற்றித்தான் முதலில் விவாதம் நடத்தப்படவேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் கருணாகரன் கூறுகையில், எண்ணெய் விலை உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தங்களது கட்சி கடுமையாக விவாதிக்கும் என்று தெரிவித்தார். மேலும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் வலியுறுத்தும் என்றும் அவர் கூறினார். இதேபோல் விவசாயிகள் பிரச்சினையையும் இடதுசாரிகள் கையில் எடுக்கும் என்று தெரிகிறது.இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), போலாவரம் நீர் மின்திட்டம் தொடர்பான சட்ட திருத்தங்களையும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி