செய்திகள்,திரையுலகம் அரிமா நம்பி (2014) திரை விமர்சனம்…

அரிமா நம்பி (2014) திரை விமர்சனம்…

அரிமா நம்பி (2014) திரை விமர்சனம்… post thumbnail image
இரவு கிளப்பில் பார்த்த முதல் நாளே அனாமிகாவின் (பிரியா ஆனந்த்) மேல் விருப்பம் கொள்ளும் அர்ஜுன் (விக்ரம் பிரபு) அவரைப் புகழ்ந்து பாடி அந்தக் கணமே அவரின் மனதில் இடம் பிடிக்கிறார்.இரண்டாவது நாள் அனாமிகாவுடன் மது அருந்திவிட்டு, நடு இரவில் அவரின் அழைப்பின் பேரில் அனாமிகாவின் வீட்டிற்குச் செல்கிறார் அர்ஜுன். ஆனால், திடீரென அந்த வீட்டிற்குள் நுழையும் இரண்டு மர்ம நபர்கள் கத்தி, துப்பாக்கியை காட்டி அனாமிகாவை கடத்திச் செல்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் அர்ஜுன், சுதாரித்த பின்பு போலீஸிடம் சென்று நடந்ததைச் சொல்லி உதவியைக் கேட்கிறார். சம்பவம் நடந்ததாக அவர் சொன்ன வீடு இருக்கும் அபார்ட்மென்டிற்கு எஸ்.ஐ. (எம்.எஸ்.பாஸ்கர்) வந்து சோதனை செய்கிறார். ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த அறிகுறியையும் அங்கே காணவில்லை.

அதோடு சேனல் 24 டிவி நிறுவனத்தின் சிஇஓவின் மகளான அனாமிகா கடந்த 4 நாட்களாக கோவாவில் இருப்பதாக அவருடைய அப்பாவே சொல்வதால், கடத்தல் என்பதை நம்பாத போலீஸ் அர்ஜுனை அவருடைய வீட்டில் இறக்கிவிட்டுச் செல்கிறது.ஆனால் நடந்திருக்கும் அத்தனை விஷயங்களும் உண்மை என்பதை ஆணித்தரமாக நம்பும் அர்ஜுன், அனாமிகாவை காப்பாற்றுவதற்காக களத்தில் நேரடியாகக் குதிக்கிறான். ஆனால், அந்தக் கடத்தலுக்குப் பின்னால் மத்திய அமைச்சர் ரிஷி தேவ் (ஜே.டி.சக்கரவர்த்தி) சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சம்பவம் ஒன்று நாயகன் அர்ஜுனுக்குத் தெரிய வருகிறது. அது என்ன? அதற்கும் அனாமிகா கடத்தலுக்கும் என்ன சம்பந்தம்? மத்திய அமைச்சர் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான்? என்பதை பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்.

தனக்கு சம்பந்தமில்லாத பிரச்சினையில் எதார்த்தமாக மாட்டிக்கொள்ளும் ஒருவன், அதிலிருந்து தப்பி ஓடாமல் அதை எதிர்த்து நின்று ஜெயிப்பதை மையக் கருத்தாக கொண்டு இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் என்ற வகையில் அவரை பாராட்டலாம். ஏ.ஆர்.முருகதாஸின் பட்டறையிலிருந்து வெளிவந்தவர் என்பதை தன் முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு உணர்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆனந்த் ஷங்கர். படம் ஆரம்பித்த 20 நிமிடங்களில் விறுவிறுவென கதைக்குள் நுழைந்து, அதன் பின்னர் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லராக அமைய இடைவேளை வரை படம் படு வேகமாக நகர்த்தி கொண்டு செல்கிறார்.இரண்டாம் பாதியை முழுக்க முழுக்க ஒரே இடத்திலேயே சுற்ற வைத்திருக்கிறார் ஆனந்த் ஷங்கர்.விக்ரம் பிரபு தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை சரியாக தேர்வு செய்திருக்கிறார். நடிப்பிலும், சண்டைக்காட்சிகளிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல் காட்சிகளில் சரியான நடிப்பை வெளிப்படுத்துவதில் தடுமாறியுள்ளார்.

பிரியா ஆனந்த் கவர்ச்சி தேவதையாக வளம் வருகிறார். படம் முழுவதும் வந்துபோனாலும் நடிப்பதற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. ஆனால் திரையில் தான் தோன்றும் காட்சிகளில் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். வில்லன் கதாப்பாத்திரத்திற்கு ஜே.டி.சக்ரவர்த்தி மத்திய அமைச்சராக வந்து மிரட்டியிருக்கிறார்.சிறிது நேரமே வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கரின் குணமும் மற்றும் நடிப்பும் மனதில் தங்கும்படி ‘நச்’சென இருக்கிறது. ‘சூது கவ்வும்’ ஜேப்பி இப்படத்தில் போலீஸ் கமிஷனராக வந்து, ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். நடிகை மேகா ஷர்மாவாக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் லேகா வாஷிங்டன். இப்படத்தை பொறுத்தவரை அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சரியான முறையில் வெளிப்படுத்தியுள்ளனர்.பரபரப்பான காட்சிகளை ரசிக்கும்படி தெளிவாகவும், நேர்த்தியாகவும் ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளில் அபாரமான் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். சண்டை மற்றும் த்ரில்லர் காட்சிகளில் அறிமுக இசையமைப்பாளர் ட்ரம்ஸ் மணியின் பின்னணி இசை அற்புதம்…

ஆக மொத்தத்தில் ‘அரிமா நம்பி’ திரைப்படம் விறுவிறுப்பு மற்றும் திகில் திரைப்படத்தை நம்பி பார்க்கலாம்………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி