அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தியா-சீனா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

இந்தியா-சீனா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

இந்தியா-சீனா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!… post thumbnail image
பீஜிங்:-இந்தியாவின் துணை அதிபர் ஹமீத் அன்சாரி தற்சமயம் சீனாவுக்கு சென்றுள்ளார். இவரது வருகையை ஒட்டி அங்கு இந்தியா-சீனா இணைந்த முக்கிய மூன்று ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்திடப்பட்டன. இவரும் சீனாவின் துணை அதிபர் லி யுவான்சாவோவும் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இவர்களின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழில் பூங்காக்களுக்கான ஒரு ஒப்பந்தமும், பிரம்மபுத்திராவின் ஆற்றின் வெள்ள அளவினைக் குறிப்பிடும் மற்றொரு ஒப்பந்தமும் இதில் அடங்கும்.
தொழில்துறை பூங்காக்கள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது இந்தியாவில் சீன முதலீடுகளை ஈர்ப்பதற்கும் மற்றும் இங்குள்ள தொழில்துறை பூங்காக்கள் மற்றும் மண்டலங்களில் முதலீடு செய்வதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்படுகின்றது.மேலும் இத்திட்டத்தில் இரு நாடுகளும் மற்றவர்களின் பொருளாதாரத்தில் அந்நாட்டு அரசின் கொள்கைகள், விதிமுறைகளுக்கு உட்பட்டு சமத்துவம் மற்றும் சமூக நலன்கள் அடிப்படையில் பரஸ்பர முதலீட்டை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

இதுதவிர இரு நாடுகளில் இருந்து சமமான அளவில் பிரதிநிதிகளைக் கொண்ட தொழில்துறை பூங்கா ஒத்துழைப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு இந்த ஒப்பந்தத்தின் நடைமுறைகளை சரிவர செயல்படுத்தவும், இதன் முன்னேற்றங்களை அவ்வப்போது திறனாய்வு செய்யவும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.பிரம்மபுத்திரா பற்றிய ஒப்பந்தம் அந்நதியின் 15 நாட்களுக்குரிய நீரியல் அளவை இந்தியாவிற்கு தெரிவிக்க உதவும். இதன்மூலம் அந்நதியின் வெள்ளப்பெருக்கை இந்தியா முன்கூட்டியே கணிக்க ஏதுவாக இருக்கும். மூன்றாவது ஒப்பந்தம் இரு நாடுகளின் நிர்வாக அதிகாரிகளும் தங்களின் சிறந்த அனுபவத்தை சீரான இடைவெளியில் நடைபெறும் சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ள உதவும் என்று தகவல்கள் தெரிவித்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி