செய்திகள்,திரையுலகம் தனுஷ் 5 ஆம் வகுப்பு (2014) திரை விமர்சனம்…

தனுஷ் 5 ஆம் வகுப்பு (2014) திரை விமர்சனம்…

தனுஷ் 5 ஆம் வகுப்பு (2014) திரை விமர்சனம்… post thumbnail image
தர்மபுரியில் நாயகன் அகிலும், மீனாளும் சிறு சிறு திருட்டுத் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அதே ஊரில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார் நாயகி அஸ்ரிதா.ஒருநாள் நாயகியின் மொபைலை நாயகன் திருடிக் கொண்டு சென்றுவிடுகிறார். திருடுபோன மொபைல் நம்பருக்கு நாயகி போன் செய்கிறாள். நாயகன் அதை எடுத்து, அவளிடம் திருப்பி கொடுப்பதாக கூறுகிறான். அதன்படி ஒருநாள் இருவரும் சந்திக்கும்போது நாயகன் தன்னை போலீஸ்போல் காட்டிக் கொள்கிறார். இந்த சந்திப்புக்கு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கின்றனர். ஒருகட்டத்தில் இருவருக்குள்ளும் காதல் வந்துவிடுகிறது.

இந்நிலையில், ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாஸ்டர் தருணின் அப்பா டாக்டர், அம்மா கலெக்டர். மிகவும் வசதி படைத்த இவர்கள் குடும்பத்தில் எப்போதும் கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் மாஸ்டர் தருண் மற்றும் அவரது தங்கை இருவரும் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.ஒருநாள் தருணுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். அங்கு வரும் அவரது பாட்டி கே.ஆர். விஜயா இவருக்கு ஒரு பொம்மையைக் கொடுத்து, அந்த பொம்மை உன்னோடு இருக்கும்வரை உன் பெற்றோர்கள் சண்டை போடமாட்டார்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார். அதேபோல், அந்த நாள் முதல் அவரது பெற்றோர்கள் சண்டை போடாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதனால் தருண் அந்த பொம்மையை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வருகிறான். இந்நிலையில், ஒருநாள் அந்த பொம்மையை பள்ளிக்கு எடுத்துக்கொண்டு செல்கிறான். அந்த பொம்மையை நாயகன் அகில் திருடிவிட்டு சென்றுவிடுகிறார். பொம்மையைத் தேடி அலையும் தருண், போலீஸ் ஸ்டேஷனில் சென்று நேரிடையாக இதுபற்றி கூறுகிறான்.

அவனுக்கு உதவி செய்ய போலீஸ் அந்த பொம்மையை தேடி அலைகிறார்கள். ஒருகட்டத்தில் அதை அகில்தான் திருடினான் என்று தெரிந்து அவரை விசாரிக்கிறார்கள். அப்போது, நாயகனும், போலீசுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதில் போலீசுக்கு அடிபட்டு மயங்கி விடுகிறார்.இதனால் பயந்த அகில், தருணை அழைத்துக் கொண்டு தலைமறைவாகிறான். தருணை அவனது வீட்டுக்கு அனுப்ப நினைக்கும் அகில், மீனாளின் உதவியை நாடுகிறான். அவரோ இவர்களின் வழக்குகளை பார்த்துக்கொள்ளும் நிழல்கள் ரவியிடம் இந்த விஷயத்தை கூறுகிறாள். நிழல்கள் ரவி மீனாளிடம் பணத்தாசை காட்டி அந்த சிறுவனை கடத்தி வைத்துக்கொள்வோம். பழி அகில் மேல் விழும் என்று கூறுகிறார். இது அகிலுக்கு தெரிய வருகிறது.அகில் போலீசாரிடமிருந்து தப்பிக்க சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

அகில் திருட்டு தொழிலுக்கு ஏற்ற தோற்றத்தில் இருந்தாலும் திருடனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காதல் காட்சிகளில் நடிக்க வாய்ப்பில்லை. நாயகி அஸ்ரிதாவிற்கு வலுவான கதாபாத்திரம் இல்லை. காதல் காட்சிகளிலும் ஜொலிக்கும்படியான காட்சிகள் அமைக்காதது ஏமாற்றமே.மாஸ்டர் தருண், கே.ஆர்.விஜயா, நிழல்கள் ரவி, மீனாள் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை ஓரளவுக்கு செய்திருக்கிறார்கள். சிறுவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் கதாக.திருமாவளவன், மற்ற கதாபாத்திரங்களை கையாள்வதில் கோட்டைவிட்டு விட்டார்.படத்தில் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் இவர், அதை செய்த அளவிற்குகூட, படத்தை எடுக்க முடியாமல் போனது வருத்தமே. படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்ஸிங். ஷாம் டி.ராஜ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சிவசங்கரன் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘தனுஷ் 5 ஆம் வகுப்பு’ தேறவில்லை……….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி