செய்திகள்,திரையுலகம் டிரான்ஸ்பார்மர்ஸ் 4 (2014) திரை விமர்சனம்…

டிரான்ஸ்பார்மர்ஸ் 4 (2014) திரை விமர்சனம்…

டிரான்ஸ்பார்மர்ஸ் 4 (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஆட்டோபாட்ஸ்களை அழித்தால் மட்டுமே தங்களால் பூமியை கைப்பற்ற முடியும்’ என்ற முடிவுக்கு வரும் டிசெப்டிகான்ஸ் சி.ஐ.ஏ அதிகாரி ஜோஸ்வாவுடன் சட்டத்திற்கு புறம்பாக கூட்டணி வைத்து சில திட்டங்களைத் தீட்டுகின்றன. அதன்படி ஆட்டோபாட்ஸ்களின் தலைவனான ஆப்டிமஸ் மற்றும் அதனுடைய சகாக்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டியதே அவர்கள் போடும் திட்டம்.

இது ஒருபுறமிருக்க, தன்னுடைய ரோபோட்டிக் ஆராய்ச்சிக்காக நாயகன் ஏகர் பழுதடைந்த பழைய டிரக் ஒன்றை வாங்கி வருகிறான். தன் மகள் டெஸாவின் உதவியுடன் அந்த டிரக்கை சரிசெய்யும்போதுதான் ஏகருக்கே தெரிகிறது அது தன்னுடைய பழைய நண்பனான இயந்திர மனிதன் ஆப்டிமஸ் என்பது. அதேநேரம் ஆப்டிமஸிடம் இருந்து கிடைத்த சிக்னல்களை வைத்து அதை சிறை பிடிப்பதற்காக ஏகரின் இருப்பிடத்தை நோக்கி வருகிறார்கள் ஜோஸ்வா அனுப்பிய சி.ஐ.ஏ. டீம்! ஆப்டிமஸ் எங்கே இருக்கிறது என சி.ஐ.ஏ. டீம் ஏகருக்கு கொலை மிரட்டல் செய்து கொண்டிருக்கும்போதே மறைந்திருக்கும் ஆப்டிமஸ் வெளியே வந்து அவர்களுடன் சண்டையிடத் தொடங்குகிறது. நடக்கும் சண்டைக்கிடையில் ஏகரையும், டெஸாவையும் காப்பாற்றுகிறான் டெஸாவின் காதலன் ஷேன்

இதன்பிறகு ஆப்டிமஸ் தனது ஆட்டோபாட்ஸ் சகாக்கள் அனைவரையும் வரவழைத்து தங்களை அழிக்கப் போட்டிருக்கும் திட்டத்தை ஏகர், டெஸா, ஷேனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். நடக்கப்போகும் இந்த யுத்தத்தில் ஆட்டோபாட்ஸ் அழிந்துவிட்டால், டெசப்டிகான்ஸ் பூமியில் உள்ள மனிதர்களை அழிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதால், ஆட்போபாட்ஸின் உதவியுடன் அவர்களின் திட்டத்தை தவிடு பொடியாக்கி டெசப்டிகான்ஸ்களை அழிக்க களமிறங்குகிறான் ஏகர். இறுதியில் வெற்றி யாருக்கு என்பதே படத்தின் முடிவு…..

மைக்கேல் பே இயக்கியிருக்கும் இந்த நான்காம் பாகத்தில் நாயகன் மார்க் வால்பெர்க் உட்பட நடித்திருக்கும் அத்தனை கேரக்டர்களும் புதியவைதான். ஆட்டோபாட்ஸ், டிசெப்டிகான்ஸ்களோடு இந்தமுறை இயந்திர டைனோசர்களும் சண்டையிட வருவதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் காட்சிகள் பரபரவென பறக்கின்றன. அதோடு இந்த பாகத்தில் ஏகருக்கும் டெஸாவுக்கும் இடையே நிலவும் பாசப் போராட்டம், டெஸாவுக்கும் ஷேனுக்குமான ரொமான்ஸ் காட்சிகள் என ஆங்காங்கே ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விஷயங்களையும் நிறைய வைத்திருக்கிறார்கள்.முந்தைய பாகங்களைவிட இந்த பாகத்தில் கிராபிக்ஸிலும், 3டி உருவாக்கதிலும் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறார்கள். இயந்திர மனிதர்களுக்கிடையே நடக்கும் ஒவ்வொரு சண்டையையும் தத்ரூபமாக படம்பிடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு இப்படம் நீண்டு கொண்டே செல்வதால் ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டத் தொடங்குகிறது.

மொத்தத்தில் ‘டிரான்ஸ்பார்மர்’ கிராபிக்ஸ் கலக்கல்………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி