செய்திகள்,முதன்மை செய்திகள் ராமேஸ்வரத்தில் பரவும் மர்மக்காய்ச்சல்…!

ராமேஸ்வரத்தில் பரவும் மர்மக்காய்ச்சல்…!

ராமேஸ்வரத்தில் பரவும் மர்மக்காய்ச்சல்…! post thumbnail image

ராமேஸ்வரம்:-

ராமேஸ்வரம் பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை எடுத்தும் ஒரு வாரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடிப்பதால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பூலித்தேவன் நகர், ராஜகோபால் நகர், கடற்கரை மாரியம்மன் கோயில் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஒருவித மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலினால் பெரும்பாலும் குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் இந்த காய்ச்சலில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் நாட்கணக்கில் சிகிச்சை எடுத்தும் காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வருவதால், குழந்தைகளின் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.காய்ச்சல் குறையாததால் தற்போது 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர தினமும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், “டாக்டர்கள் ஊசி போட்டு, மாத்திரைகள் தருகின்றனர். ஆனாலும், காய்ச்சல் குறையவில்லை. சுகாதாரத் துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. அங்கு குழந்தையை எடுத்து செல்லுங்கள் என்று கூறுகின்றனர். ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்து, காய்ச்சலின் தன்மையை கண்டறிந்து குணப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் 5 படுக்கைகள் மட்டுமே உள்ளன. போதிய படுக்கை வசதி இல்லாததால் ஒரே படுக்கையில் 3 குழந்தைகள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல குழந்தைகள் தரையிலும், பகலில் நடைபாதை வராண்டாவிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.புனித தலமான ராமேஸ்வரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனவே, இங்கு பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தவும், அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டை மேம்படுத்தவும் சுகாதாரத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி