செய்திகள்,திரையுலகம் நேற்று இன்று (2014) திரை விமர்சனம்…

நேற்று இன்று (2014) திரை விமர்சனம்…

நேற்று இன்று (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நேற்று இன்று என இரண்டு கோணங்களில் கதை நகர்கிறது. நேற்றைய பொழுதில் ரிச்சர்ட், பரணி, நிதிஷ், ஹரீஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் தலைமையில் கொண்ட குழு வீரா தலைமையில் உள்ள பயங்கரவாத கும்பல் மீது சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் வீரா மற்றும் அவருடைய கூட்டாளிகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர்.

இதையடுத்து வீராவின் சகாப்தம் முடிந்தது என்று நினைத்திருக்கும் வேளையில், வீராவிற்கு மிகவும் நெருக்கமான பிரசன்னாவை தேடி கண்டுபிடிக்க தனிப்படை ஒன்று அமைக்கப்படுகிறது. அந்தப்படையில் ஐந்து பேர் மட்டும் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு கேப்டனாக ஜெமினி பாலாஜி நியமிக்கப்படுகிறார். இந்த ஐவரும் காட்டுப்பகுதிக்குள் பிரசன்னாவை தேடி பயணமாகிறார்கள். செல்லும் வழியில் அருந்ததியை சந்திக்கிறார்கள். அவரிடம் பிரசன்னா இருக்கும் இடத்தை தெரியுமா என்று கேட்க, அதற்கு தெரியும் என்று அவர்களை அழைத்துச் செல்கிறார்.செல்லும் வழியில் ரிச்சர்ட்டை தவிர மற்ற நான்குபேரும் அருந்ததியுடன் நெருங்கி பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் இறந்துபோன வீரா, காட்டுக்குள் புதைத்து வைத்திருந்த பணத்தை கண்டெடுக்கிறார்கள். இந்தப்பணத்தை பார்த்த இவர்கள் அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்காமல் தாங்களே வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள்.

இதற்கு ரிச்சர்ட் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் மற்ற நான்குபேர் ரிச்சர்ட்டை தீர்த்துக்கட்ட நினைக்கிறார்கள். ரிச்சர்ட் அவர்களிடம் உயர் அதிகாரிகளிடம் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று உறுதி கூறுவதால் அவரை தீர்த்துகட்டாமல் விட்டுவிடுகின்றனர். இருப்பினும் ரிச்சர்ட் மீது தனி பகை கொண்ட நிதிஷ், கேப்டன் ஜெமினி பாலாஜியுடன் சேர்ந்து கொல்ல திட்டம் தீட்டுகிறார்.இன்றைய பொழுதியில் கையில் ஒரு கடிதத்துடன் கபினி செக்போஸ்ட்டை நோக்கி பயணப்படுகிறார் மனோசித்ரா. பாதி வழியில் இவருடைய கார் பழுதாகிவிடுகிறது. உடனே அருகில் இருக்கும் மெக்கானிக் கடைக்கு சென்று அங்கு வேலைப் பார்க்கும் விமலிடம் உதவி கேட்கிறாள். எப்போதும் குடியும் குட்டியுமாக இருக்கும் விமல் அங்கு செல்ல பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்கிறார். மனோசித்ராவோ ஐந்தாயிரத்தை முன்பணமாக கொடுத்துவிட்டு மீதி பணத்தை கபினி செக்போஸ்ட் வந்தவுடனே கொடுக்கிறேன் என்று சொல்கிறார். விமலும் இதற்கு சம்மதித்து இரண்டு பேரும் கபினி செக்போஸ்ட் நோக்கி செல்கிறார்.

போகும்வழியில் மனோசித்ராவை அடைய நினைக்கிறார் விமல். ஒரு கட்டத்தில் மனோசித்ராவின் கைப்பையில் இருந்த பணம் தொலைந்துபோக விமல் இதுதான் தருணம் என்று மீதிப்பணத்திற்கு மனோசித்ராவையே கேட்கிறார். வேறுவழியில்லாத மனோசித்ராவும் கபினி செக்போஸ்ட்டுக்கு என்னை கொண்டுபோய் விட்டால் தன்னைத் தருவதாக கூறுகிறாள். விமலும் அதற்கு சம்மதித்து கபினிக்கு செல்கிறார்கள்.இறுதியில் தன்னையே கொடுத்து கபினி செக்போஸ்ட்டிற்கு மனோசித்ரா செல்ல காரணம் என்ன? பிரச்சனைகளோடு பிரசன்னாவை தேடி செல்லும் ஐந்துபேரும் பிரசன்னாவை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.படத்தில் ரிச்சர்ட், பரணி, நிதிஷ், ஹரீஷ், ஜெமினி பாலாஜி ஆகிய ஐந்து பேருக்கும் சமமான கதாபாத்திரம். ஆக்‌ஷன், அட்வென்சர் கதையில் காமெடி இருக்க வேண்டும் என்பதற்காக ஜெமினி பாலாஜி, பரணி ஆகிய இரண்டு கதாபாத்திரங்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. மற்றபடி அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பிரசன்னா பிற்பாதியில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். ஆடு மேய்ப்பவராக வரும் காட்சியில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் ஆரம்பத்தில் மது அருந்துவது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற விழிப்புணர்வு விளம்பரத்தை வாசிக்கும் விமல், இப்படம் முழுக்க மது அருந்திக்கொண்டே இருப்பது சற்று நெருடலை தருகிறது. ஆனாலும் குடிகாரன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.நாயகி மனோசித்ரா அரைகுறை ஆடைகளில் வந்தாலும் அதிகம் கவர்ச்சியில்லாமல் நடித்திருக்கிறார். மற்றொரு நாயகி அருந்ததியோ ஒரேயொரு கருப்பு பனியனை மட்டுமே அனிந்துக் கொண்டு படம் முழுக்க கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் கிளுகிளுப்பாக இருக்கின்றன.
படத்தின் முதல்பாதியில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பத்மா மகன். இரண்டு கால கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை வைத்துக்கொண்டு நேற்று இன்று என்று பிரித்து பார்ப்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார் இயக்குனர். பிற்பகுதியில் திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் இயக்குனர்.ரெஹான் இசையில் பாடல்கள் ஒன்றும் புரியவில்லை. பின்னணி இசையில் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார். தினேஷ்ஸ்ரீயின் ஒளிப்பதிவில் காட்டுப்பகுதிகள் அழகாக காட்சியளிக்கின்றன. சில இடங்களில் வசனங்கள் நெருடலை ஏற்படுத்துகின்றன.

மொத்தத்தில் ‘நேற்று இன்று’ வெற்றி……..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி