செய்திகள்,திரையுலகம் வெற்றிச்செல்வன் (2014) திரை விமர்சனம்…

வெற்றிச்செல்வன் (2014) திரை விமர்சனம்…

வெற்றிச்செல்வன் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
அஜ்மல், செரிப் மற்றும் மனோ ஆகியோர் மனநல காப்பகத்தில் இருந்து தப்பித்து ஊட்டிக்குச் செல்கிறார்கள். அங்கு கார் சர்வீஸ் செய்யும் கம்பெனியில் மேனேஜராக பணிபுரியும் கஞ்சா கருப்புவை சந்திக்கிறார்கள். இவரிடம் அந்த மூவரும் வேலை கேட்கிறார்கள். கஞ்சா கருப்புவும் தான் பணிபுரியும் கம்பெனியிலேயே வேலை வாங்கித்தருகிறார்.

இதே ஊரில் வக்கீலாக இருக்கும் ராதிகா ஆப்தேவுடன் அஜ்மலுக்கு பழக்கம் ஏற்படுகிறது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. ஒருநாள் அஜ்மல், செரிப் மற்றும் மனோ ஆகியோர் செல்லும் வழியில் மண் சரிவு ஏற்படுகிறது. இதில் ஊழியர்கள் மண்சரிவில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களை காப்பாற்ற மூவரும் போராடுகிறார்கள்.இதை அங்குள்ள பத்திரிகைகள் படம் எடுத்து வெளியிடுகிறது. இதைப் பார்த்த போலீசார் ஊட்டிக்கு விரைந்து வந்து இவர்களை கைது செய்கிறார்கள். இவர்களை போலீசில் இருந்து விடுவிக்க வக்கீலான ராதிகா ஆப்தே முயற்சி செய்கிறார்.

அப்போது போலீசார் கைது செய்ததைப் பற்றி ராதிகா, அஜ்மலிடம் விசாரிக்கும் போது, நாங்கள் மனநல காப்பகத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருந்தோம். நாங்கள் சில மாதங்களிலே குணமடைந்தாலும் எங்களின் உறவினர்கள் யாரும் வந்து எங்களை அழைத்துச் செல்லாததால் நாங்கள் 15 வருடத்திற்கு மேலாகவே மனநல காப்பகத்தில் இருந்தோம்.அங்கு எங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் முதல்வர் ஓய்வு பெற்று சென்றதால் புதியதாக வந்த மருத்துவர், தனியார் மருத்துவமனை தலைவர் தலைவாசல் விஜயுடன் கூட்டணி சேர்ந்துக் கொண்டு மனநிலை பாதிக்கப்பட்டவர்களை வைத்து, உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் பணம் சம்பாதிக்கிறார்.இந்நிலையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுமியின் இதயத்தை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விலை பேசுகிறார்கள். இதை அறிந்த வாடர்ன் அழகம் பெருமாள், எங்களிடம் கூறினார். நாங்கள் தப்பித்துச் செல்ல ஆலோசனையும் கூறினார். எங்களுடன் அந்த சிறுமியையும் அழைத்துச் செல்லும்படி கூறினார். இதன்படி நாங்கள் தப்பித்தோம்.

ஆனால் எங்களுடன் சிறுமி வராததால், நாங்கள் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று சிறுமியை தேடினோம். அங்கு மருத்துவர் அறையில் புதியதாக வந்த மருத்துவர் இறந்த நிலையில் இருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பித்து வந்தோம் என்று கூறுகிறார்.இதைக்கேட்ட ராதிகா, இவர்களது நிலைமைக்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் பிடியில் பிடித்துக் கொடுக்க நினைக்கிறார். கடைசியில், அவர்களை கண்டுபிடித்து, தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? அஜ்மலை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.நாயகன் அஜ்மல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கேற்றார் போல் சிறப்பாக நடித்திருக்கிறார். பாடகர் மனோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். இளைய தலைமுறையோடு இணைந்து நடித்திருக்கும் இவர், இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். டான்சரான செரீப் தன்னுடைய முதல் படத்திலேயே திறம்பட நடித்துள்ளார்.

ராதிகா ஆப்தே, ஆர்ப்பாட்டமில்லாமல் எதார்த்தமான நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார். அழகம் பெருமாளுக்கு முதல்பாதியில் நடிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், பிற்பாதியில் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். கஞ்சா கருப்பு வரும் காட்சிகள் கலகலக்க வைக்கிறது.அழகான கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர், அதை 2 மணி நேர படமாக்குவதில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். படத்தின் விறுவிறுப்பை கூட்ட ரசிக்கும்படியான காட்சிகள் இல்லாதது வருத்தமே.மணிசர்மா இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பின்னணி இசையும் பரவாயில்லை. லோகநாதன் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘வெற்றிச்செல்வன்’ சாதிக்க பிறந்தவன்………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி