செய்திகள்,திரையுலகம் டிராகன் 2 (2014) திரை விமர்சனம்…

டிராகன் 2 (2014) திரை விமர்சனம்…

டிராகன் 2 (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஒரு அழகிய தீவு. அதில் ராஜாவாக நாயகனின் தந்தை. இவர் நாயகனிடம் தன்னுடைய பொறுப்புகள் அனைத்தையும் கொடுத்து அழகு பார்க்க நினைக்கிறார். இதற்கு கொஞ்சமும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் நாயகன். இந்த தீவில் அனைவரும் டிராகன்களை தங்களது செல்லப்பிராணியாகவும், வாகனமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒருநாள் தனது டிராகனுடன் வானில் சுற்றிக் கொண்டிருக்கிறார் நாயகன். அப்போது இவனைத் தேடி நாயகி வருகிறாள். இருவரும் சேர்ந்து ஒரு வித்தியாசமான தீவைப் பார்க்க, அதன்பிறகு அங்கு செல்கிறார்கள். அங்கு இறங்கும் இவர்களையும், இவர்களது டிராகன்களையும் சிறை பிடிக்கிறது ஒரு கும்பல்.நாயகன் அவர்களிடம் எதற்காக எங்களை சிறைபிடிக்கிறீர்கள்? எங்கள் டிராகனை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கும்போது, அதில் ஒருவன் இந்த டிராகன்களை கொண்டுபோய், டிராகன்களின் தலைவனிடம் ஒப்படைத்தால் எனக்கு பணம் கிடைக்கும் என்று சொல்கிறார். இந்த டிராகன்களை வைத்து அவர் என்ன செய்வார் என்று கேட்கும்போது, டிராகன்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, எல்லா நாடுகளின் மீதும் போரிடப் போகிறார் என்றும் சொல்கிறார்.

இதை அறிந்த நாயகன், அங்கிருந்து தப்பித்து தனது தந்தையிடம் சென்று நடந்தவற்றை கூறுகிறான். நாயகன் தந்தை நாம் போரிட தயாராக இருக்கவேண்டும் என்று சொல்கிறார். அதை ஏற்காத நாயகன், தான் டிராகன் தலைவனிடம் சென்று சமாதானம் பேசுவதாக கூறுகிறான். இதை வேண்டாமென்று நாயகனின் அப்பா சொல்லியும் கேட்காமல், அங்கிருந்து புறப்பட்டு செல்கிறான் நாயகன். செல்லும் வழியில் ஒரு பெண்ணை பார்க்கிறார். அவள்தான் டிராகன் தலைவன் என்று நினைத்துக் கொள்கிறார் நாயகன். பின்பு, அவள் நாயகனின் தாய் என்பது அவருக்கு தெரிகிறது. நாயகனுடைய அம்மாவும் சில டிராகன்களை தன் கட்டுக்குள் வைத்து இருக்கிறார்.இந்நிலையில் நாயகனை தேடி வரும் அவரது அப்பாவும் இவர்கள் இருக்கும் இடத்திற்கே வருகிறார். அங்கு தனது மனைவியைக் கண்டதும் மகிழ்ச்சியடைகிறார் நாயகனின் தந்தை. மூன்று பேரும் பேசி, டிராகன் தலைவனை எதிர்த்து போரிடலாம் என்று முடிவெடுக்கும் நிலையில், டிராகன் தலைவனே இவர்கள் இடத்திற்கு தன் படைகளோடு வந்து போரிடுகிறான்.

இந்த போரில் நாயகனின் தந்தை இறந்து போகிறார். டிராகனின் தலைவன் அனைத்து டிராகன்களையும் தன் வசப்படுத்தி அழைத்துச் செல்கிறான். போரில் உயிர் பிழைக்கும் நாயகன், மீதமிருக்கும் சிறு டிராகன்களை வைத்து தனது நாட்டையும், தனது டிராகன்களையும் காப்பாற்ற செல்கிறார். இதில் வெற்றி பெற்றாரா? டிராகன்களை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.குழந்தைகள் ரசிக்கும்படியான கதாபாத்திரங்களை உருவாக்கி அதற்கு அழகான தமிழ் வசனங்களையும் பேசவைத்து ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்கள். டிராகன்களுடன் வானத்தில் பறக்கும் காட்சிகள் 3டியில் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இப்படம், பார்க்கவும், ரசிக்கவும் நன்றாக இருக்கிறது. அந்த தொழில்நுட்பத்தை திறமையாக கையாண்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘டிராகன் 2’ கொண்டாட்டம்……….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி