செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…

இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…

இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியாவில் மண்ணெண்ணெய் இல்லா முதல் நகரமாக டெல்லி மாறியுள்ளது என்று அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. ‘டெல்லி- மண்ணெண்ணெய் இல்லா நகரம் 2012’ என்ற திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியதன்மூலம் இந்த நிலை சாத்தியமானது.மானிய விலை விநியோகம் இங்கு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாயை சேமிக்கவும் முடியும் என்று உணவு வழங்கல், எடை மற்றும் அளவுகள் துறையின் கமிஷனர் எஸ்.எஸ்.யாதவ் தெரிவித்தார்.

கடந்த 2012ம் ஆண்டில் மூன்று எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ரேஷன் அட்டையில் மண்ணெண்ணெய் பெறும் குடும்பதாரர்கள் அனைவருக்கும் இலவச எரிவாயு இணைப்பும், சிலிண்டர்களும் வழங்கப்பட்டு வீட்டுத் தேவைகளுக்கான மண்ணெண்ணெய் முற்றிலும் குறைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 2 லட்சம் குடும்பங்கள் இந்த முறையில் எரிவாயு உபயோகத்திற்கு மாற்றப்பட்டனர்.

இதற்கு முன்னால் 53,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் டெல்லி நகரத்தில் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது இந்த நிலை மாற்றப்பட்டிருப்பதன் மூலம் அரசின் செலவு குறைவதுடன் இந்த எண்ணெய்யை எரிப்பதால் வெளியேறும் நச்சு புகைகள் கலந்து காற்று மாசுபாடு அடைவதும் அறவே ஒழிக்கப்படும்.மண்ணெண்ணெய் அடுப்புகள் வெடிப்பதால் ஏற்படும் விபத்துகளும், காயங்களும் குறைவதுடன் மக்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படும் என்று யாதவ் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி