அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்கள் மோதல்!…

அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்கள் மோதல்!…

அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்கள் மோதல்!… post thumbnail image
அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசில் சீக்கியர்களின் உலக புகழ் பெற்ற பொற் கோவில் உள்ளது. 1984ம் ஆண்டு இந்த கோவிலுக்குள் காலிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. அவர்களை வெளியேற்றுவதற்காக அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ‘‘ஆபரேசன் ப்ளு ஸ்டார்’’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்தார். ஆபரேசன் ப்ளு ஸ்டார் நடந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பான நிகழ்ச்சிகள் பொற்கோவிலில் நடத்தப்பட்டு வந்தது.

இன்று காலை நடந்த வழிபாட்டுடன் அந்த சிறப்பு நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன. இதையொட்டி சீக்கியர்களின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பொற்கோவிலில் திரண்டிருந்தனர். வழிபாடு நடந்து கொண்டிருந்த நிலையில் சிரோமணி அகாலிதளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது பாரம்பரிய போர்க் கருவிகள், வாள்களுடன் பொற்கோவிலுக்கு வந்தனர். அவர்கள் காலிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியபடி பொற்கோவில் வளாகத்தில் உள்ள அகல் தகத் கட்டிடத்துக்குள் சென்றனர். அப்போது அவர்களை சீக்கிய அமைப்புகளில் வலுவான அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டியைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். காலிஸ்தான் கோஷம் எழுப்பப் கூடாது என்று கண்டித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாய்த் தகராறு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் அந்த வாய் சண்டை கைகலப்பாக மாறியது. இதையடுத்து சீக்கியர்களின் இரு பிரிவினரும் வாள் சண்டையில் இறங்கினார்கள். மன்னர்கள் காலத்தில் நடக்கும் வாள் சண்டை போல அவர்கள் ஒருவரை ஒருவர் விரட்டியபடி வாள் வீச்சில் ஈடுபட்டனர். அகல் தகத் கட்டிடத்தை சுற்றி சுற்றி வந்து அவர்கள் வாள் சண்டை போட்டனர். கம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களும் மோதலில் பயன்படுத்தப்பட்டன. சுமார் 30 நிமிடம் இந்த மோதல் நீடித்தது.இந்த சண்டையில் 12 பேர் வாள் பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அமிர்தசரசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் காரணமாக அமிர்தசரஸ் பொற்கோவிலில் பதற்றம் ஏற்பட்டது. வன்முறை மீண்டும் வராமல் இருக்க சிரோமணி குருத்துவாரா பிரபந்த கமிட்டி மூத்த நிர்வாகிகள் பொற்கோவிலில் முகாமிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி