செய்திகள்,முதன்மை செய்திகள் மெர்ஸ் உயிர்க்கொல்லி ஒட்டகத்தின் மூலம் பரவியிருக்கலாம் என தகவல்!…

மெர்ஸ் உயிர்க்கொல்லி ஒட்டகத்தின் மூலம் பரவியிருக்கலாம் என தகவல்!…

மெர்ஸ் உயிர்க்கொல்லி ஒட்டகத்தின் மூலம் பரவியிருக்கலாம் என தகவல்!… post thumbnail image
லண்டன்:-மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பரவி வரும் சுவாசத் தொற்று நோயான மெர்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய் முதன் முதலில் கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. இதில் இதுவரை பதிவாகியுள்ள 681 வழக்குகளில் 204 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்த நோய்க்கான துல்லியமான மூல காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்பட முடியாமல் இருந்துவந்தது.

சவுதி அரேபியாவில் இந்நோய்த் தாக்கம் கண்டிருந்த 44 வயது மனிதர் ஒருவர் ஜெட்டாவில் உள்ள மன்னர் அப்துலாசிஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் சமீபத்தில் மரணமடைந்தார். இவர் ஒன்பது ஒட்டகங்களை வைத்து பராமரித்து வந்துள்ளார். இவர் நோய்வாய்ப்படுவதற்கு முன் உடல்நிலை பாதித்திருந்த அந்த ஒட்டகங்களுக்கு மூக்கு வழியாக மருந்துகளை அளித்து வந்துள்ளார்.அந்த ஒட்டகங்கள் மற்றும் இறந்தவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட நோய் வைரஸ் மாதிரிகளை ஆய்வு செய்ததில் இரண்டும் ஒத்த மரபணுக்களைக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதன்மூலம் நோய்த்தொற்று பாதித்திருந்த விலங்குகளுடன் அந்த மனிதர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததே சுவாச நோய் பரவியதற்கு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய ஒப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறும் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜோனாதன் பால் இந்த ஆய்வின் முடிவுகள் ஒட்டகமே நோய்த்தொற்றின் மூலகாரணம் என்பதைத் தெளிவுபடுத்துவதாக இருக்கின்றது என்றார்.இருப்பினும், ஒட்டகப் பாலிலும் சம அளவிலான வைரஸ் கிருமிகள் காணப்பட்டதால் சுவாசம் மூலம் மட்டுமே இந்நோய் பரவியதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று ஆய்வு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஆய்வு குறித்த அறிக்கை முடிவுகள் இங்கிலாந்தின் மருத்துவப் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி